தமிழகம்

தயான்சந்த் விருது பெறும் மதுரையைச் சேர்ந்த தடகள பயிற்சியாளரின் பணி நிரந்தரக் கனவு நிறைவேறுமா?

சுப.ஜனநாயகச் செல்வம்

தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மாற்றுத்திறனாளிகளின் தடகள பயிற்சியாளரான ஜெ.ரஞ்சித்குமார் (ஒப்பந்தம் ), இந்திய அரசின் தயான்சந்த் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவ்விருதினை, அவர் ஆக.29-ம் தேதி இந்திய ஜனாதிபதியிடம் காணொலி மூலம் பெறவுள்ளார்.

மதுரையைச் சேர்ந்த ஜெ.ரஞ்சித்குமார் (46). மாற்றுத்திறனாளியான இவர், காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டுகளில் பல பதக்கங்களைப் பெற்ற வீரர்.

தற்போது தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒப்பந்த தடகள பயிற்சியாளராகவும் உள்ளார்.

உலக அளவிலான குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல் விளையாட்டுப் போட்டிகளில் 26 போட்டிகளில் பங்கேற்று 10 தங்கப்பதக்கம், 6 வெள்ளிப்பதக்கம், 6 வெண்கலப்பதக்கம் பெற்று இந்தியாவுக்கு பெருமை தேடித்தந்திருக்கிறார். மேலும் தேசிய அளவிலான போட்டிகளில் 38 தங்கப்பதக்கம் பெற்றிருக்கிறார்.

2019-ல் மொரோகோ நாட்டில் நடைபெற்ற உலக அளவிலான மாற்றுத்திறனாளி தடகள போட்டியில் இந்திய அணி பயிற்சியாளராகவும், மேலாளராகவும் இருந்து அதிக தங்கப்பதக்கம் பெற்றுத் தந்திருக்கிறார்.

கடந்த 2014-லிருந்து விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்று, 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு தடகள பயிற்சி அளித்து வருகிறார்.

தற்போது இவரது சேவையையும், திறமையையும் பாராட்டி இந்திய அரசு தயான்சந்த் வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு தேர்வு செய்துள்ளது. தேசிய விளையாட்டு தினமான ஆக.29-ம் தேதி இவ்விருதினை ஜனாதிபதியிடமிருந்து விருதினைப் பெறவுள்ளார்.

இதுகுறித்து மாற்றுத்திறனாளிகளுக்கான தடகளப் பயிற்சியாளர் ஜெ.ரஞ்சித்குமார் கூறியதாவது: இந்திய அரசால், தயான்சந்த் வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளேன்.

பெங்களூருவில் ஆக.29-ம் தேதி நடைபெறவுள்ள விருது வழங்கும் விழாவில் ஜனாதிபதியிடமிருந்து விருதினைப் பெறவுள்ளேன். 2013-ம் ஆண்டு தேசிய அளவிலான சிறந்த விளையாட்டு வீரர் விருதினை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் பெற்றேன்.

அதேபோல், 2012ல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் மாநில அளவிலான சிறந்த பணியாளர் விருதினை பெற்றேன்.

தற்போது தமிழக அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் 13 ஆண்டாக ஒப்பந்த அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளுக்கான தடகள பயிற்சியாளராக உள்ளேன். இப்போதாவது, என்னைப் பணி நிரந்தரம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

SCROLL FOR NEXT