தேமுதிக தலைவர் விஜயகாந்த் இனி 'கிங்'காகத்தான் இருக்க வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பம் என, அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று (ஆக.25) தனது 68-வது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார். இதையொட்டி, தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், சென்னையில் உள்ள தனது இல்லத்தில் கட்சித் தொண்டர்களுக்கும் பொதுமக்களுக்கும் இனிப்புகளை வழங்கினார்.
இதன்பின்னர் அவர் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியா அல்லது தனித்துப் போட்டியா?
தேர்தலுக்கு இன்னும் நிறைய காலம் இருக்கிறது. உரிய நேரத்தில் கட்சியின் செயற்குழு, பொதுக்குழுவைக் கூட்டி தலைவர் அறிவிப்பார். இப்போது வரைக்கும் கூட்டணியில்தான் இருக்கிறோம். ஆனால், தேமுதிக தலைவர் 'கேப்டன்' இனி 'கிங்'காகத்தான் இருக்க வேண்டும், தனித்துப் போட்டியிடத் தயாராக இருக்கிறோம் என, அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் தெரிவித்துள்ளனர். டிசம்பர்-ஜனவரி மாதத்தில் எங்களின் முடிவை தலைவர் அறிவிப்பார்.
அதிமுகவில் யார் முதல்வர் வேட்பாளர் என்பதில் சிக்கல் எழுந்துள்ளதே?
அது அவர்களின் உட்கட்சி விவகாரம். நாட்டின் விவகாரம் அல்ல. அந்தப் பிரச்சினையை அவர்களே தீர்த்துக் கொள்வார்கள்.
திமுகவினருக்கு உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பப்பட்டதில் அவர்களுக்குச் சாதகமான தீர்ப்பு வந்துள்ளதே?
சட்டம் தன் கடமையைச் செய்யும். நீதிமன்றத்தின் தீர்ப்பை இறுதித் தீர்ப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
உங்களுக்கு அதிமுக எம்.பி. சீட் வழங்காததால் மனக்கசப்பா?
எங்களுக்குக் கிடைக்க வேண்டும் என நினைப்பதை யாராலும் தடுக்க முடியாது. அதைவிட மிகப்பெரிய எண்ணிக்கையில் எம்.பி.க்களாக தேமுதிக கணக்கைத் தொடங்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இந்தித் திணிப்பு உள்ளிட்ட பாஜகவின் செயல்பாடுகளைச் சமீபமாக தேமுதிக தலைவர் விமர்சித்திருந்தாரே?
நல்ல விஷயமாக இருந்தால் அதனை வரவேற்போம். தமிழக மக்களுக்குப் பாதகமான விஷயமாக இருந்தால் அதனை நாங்கள்தான் முதல் ஆளாக எதிர்ப்போம். அன்னை மொழி கற்போம், அனைத்து மொழியையும் காப்போம் என்பதுதான் தலைவரின் நோக்கம். தமிழுக்குத்தான் முதலிடம். தமிழ் நம் உயிர், மற்ற மொழிகளைக் கற்பதில் தவறில்லை.
இவ்வாறு பிரேமலதா தெரிவித்தார்.