கரோனா தொற்று காரணமாகப் பொது முடக்கம் கடுமையாகக் கடைப்பிடிக்கும் இடங்களாகச் சுற்றுலாத் தலங்கள் விளங்குகின்றன. குறிப்பாக, கோவை மாவட்டத்தில் உள்ளடங்கியிருக்கும் மலைப் பிரதேசமான வால்பாறையில் கோவை மாவட்டவாசிகளே பொள்ளாச்சி ஆழியாறு எல்லையில் தடுக்கப்பட்டனர். வால்பாறைக்குச் சுற்றுலாவுக்கு வந்தவர்களும் திருப்பி அனுப்பப்பட்டனர்.
அதேபோல் மண்டலங்களுக்குள் பேருந்துப் போக்குவரத்தை அனுமதிக்கலாம் என்ற தளர்வு வந்தபோதுகூட கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்ட மக்கள் நீலகிரிக்குள் அனுமதிக்கப்படவில்லை. நீலகிரியில் பணிக்குச் செல்பவர்கள், அத்தியாவசியக் காரணங்களுக்காகச் சென்றுவரும் நீலகிரி வாழ் மக்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
வெவ்வேறு விதமாகப் பொது முடக்கத் தளர்வு மாநிலம் முழுவதும் அறிவிக்கப்பட்டு வந்தாலும் 'நீலகிரியில் இப்படியொரு கடுமை காட்டாவிட்டால் சுற்றுலாப் பயணிகள் குவிந்து விடுவர்; அவர்கள் மூலம் கரோனா தொற்று பரவிவிடும்' என்ற காரணத்தால்தான் நீலகிரி மாவட்ட நிர்வாகம் இந்த விஷயத்தில் இத்தனை கறாராக இருந்துவந்தது. இதனால்தான் ஆரம்பத்தில் மாவட்டத்தில் ஒன்றிரண்டு பேருக்குக் கரோனா தொற்று இருந்த நிலையிலும் அது கட்டுப்படுத்தப்பட்டது.
இதற்கிடையே, ஊட்டி அருகே உள்ள ஊசி தொழிற்சாலையில் பணிபுரிந்தவருக்குத் தொற்று கண்டறியப்பட்டு, அந்தத் தொழிற்சாலை சீல் வைக்கப்பட்டது. அதில் பணிபுரியும் ஊழியர்கள் நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் வசிப்பதால் அங்கெல்லாம் சென்று கரோனா தொற்று சோதனையை நடத்தினர் சுகாதார அலுவலர்கள். இருந்தாலும் அதற்குள் பல்வேறு கிராமங்களில் தொற்று வேகமாகப் பரவிவிட்டது. நூற்றுக் கணக்கானோருக்குத் தினம் தினம் தொற்று கண்டுபிடிக்கும் நிலை இருந்துவந்தது. அதைக் கட்டுப்படுத்த மேலும் மேலும் பொது முடக்கம் கடுமையாக்கப்பட்டு வந்தது.
மற்ற இடங்களுக்கு இ-பாஸ் வழங்குவது போல் இல்லாமல் நீலகிரி மாவட்டத்திற்குள் நுழையவே இ-பாஸ் பெறுவதில் கடுமை காட்டப்பட்டது. இதன் காரணமாக நீலகிரியில் சமீபகாலமாகக் கரோனா தொற்று ஓரளவு கட்டுக்குள் வந்தது. இந்தச் சூழ்நிலையில், ''இப்போது விண்ணப்பிப்பவர்களுக்கு எல்லாம் இ-பாஸ் கிடைத்துவிடுவதால் வசதி வாய்ப்புள்ள பலரும் இதைப் பயன்படுத்தி இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்களில் நீலகிரிக்கு வருகின்றனர். அவர்கள் இங்கே இருக்கும் காட்டேஜ்களில் அறை எடுத்துத் தங்கிவிடுகின்றனர். இதனால் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம் உள்ளது' என்று நீலகிரி மாவட்ட மக்கள் புலம்புகிறார்கள்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய ஊட்டி செவன்ஹில்ஸ் பகுதியைச் சேர்ந்த சாதிக், ''ஊட்டியில் 1,500-க்கும் மேற்பட்ட காட்டேஜ்கள் இருக்கின்றன. செவன்ஹில்ஸ் பகுதியில் மட்டும் 80-க்கும் அதிகமான காட்டேஜ்கள் உள்ளன. இந்தக் கோடை சீசனில் கரோனா காரணமாகச் சுற்றுலாப் பயணிகள் நீலகிரிக்குள் அனுமதிக்கப்படவில்லை. அதனால் தங்கும் விடுதிகள் அனைத்தும் வெறிச்சோடிக்கிடந்தன. எனவே, இனி சுற்றுலாப் பயணிகளை நம்பிப் புண்ணியமில்லை என்று முடிவு செய்த காட்டேஜ்காரர்கள் விடுதி வீடுகளைக் குடியிருப்பவர்களுக்கு வாடகைக்கு விட ஆரம்பித்துவிட்டனர். தற்போது இ-பாஸ் தளர்வால் ஏகப்பட்ட சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகின்றனர். இதனால் காட்டேஜ்கள் நிரம்பிவருவதுடன், தொற்றும் அதிகரித்திருக்கிறது.
கடந்த மூன்று நாட்களில் மட்டும் முறையே 75 பேர், 80 பேர், 85 பேர் என தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை கூடிக் கொண்டே இருக்கிறது. இதைக் கட்டுப்படுத்த உள்ளூர்வாசிகள் நேரில் சென்று மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து, 'சுற்றுலா நோக்கோடு இங்கே வரும் நபர்களை அனுமதிக்கக் கூடாது. குறிப்பாக, காட்டேஜ்களில் அப்படியானவர்களுக்கு அறை தரக்கூடாது' என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதற்கு ஆட்சியர், 'அப்படி சுற்றுலா வருபவர்களுக்கு அறை தரும் காட்டேஜ்களை இனம் காட்டுங்கள். நடவடிக்கை எடுக்கிறோம்' என்று சொல்லியிருக்கிறார். அப்படியான காட்டேஜ்களைக் கண்டறிந்து பட்டியல் தயாரித்து வருகிறோம். விரைவில் அது ஆட்சியரிடம் அளிக்கப்படும்" என்றார்.