காவேரிப்பட்டணத்தில் போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் தூய்மைப் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. வீடுகளில் குப்பை சேகரித்தல், தெருவில் குப்பை அள்ளுதல், சாக்கடை கால்வாய் சீர் செய்யும் பணியில் சுமார் 40-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இப்பணிகளில் ஈடுபடும் போது, நோய்த்தொற்று மற்றும் கண்ணாடி, இரும்பு பொருட்களால் காயம் என பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு, கையுறை, காலுறை, தொப்பி, முகக்கவசம் என பாதுகாப்பு உபகரணங்களை கட்டாயம் அணிந்து, சுகாதாரப்பணி மேற்கொள்ள வேண்டும் வலியுறுத்தப்பட்டது. இதற்காக தூய்மைப் பணியாளர்களுக்கு தேவையான உபகரணங்களை உள்ளாட்சி நிர்வாகங்கள் வழங்க வேண்டும்.
இந்நிலையில். காவேரிப் பட்டணம் நகரில் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. இதனால் நகரின் பல்வேறு பகுதிகளில் சாக்கடை கால்வாய் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் சாலையில் வழிந்தோடியது. இதனைத் தொடர்ந்து பேரூராட்சி தூய்மைப் பணியாளர்கள் சாக்கடை அடைப்பினை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, பாதுகாப்பு உபகரணங்கள் அணியாமல் கைகளால் சாக்கடை கால்வாயில் அடைப்புகளை நீக்கும் பணியை மேற்கொண்டனர். தூய்மைப் பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.