தமிழகம்

குமாரராஜா எம்ஏஎம் முத்தையா செட்டியார் பிறந்த நாள்: மானுடம் தழைக்க அன்பை ஆதாரமாக்கி வாழ வேண்டும் - நீதிபதி ஆர்.மகாதேவன் வேண்டுகோள்

செய்திப்பிரிவு

மானுடம் தழைக்க அன்பை ஆதாரமாக்கி வாழ வேண்டும் என்று நீதிபதி ஆர்.மகாதேவன் கூறினார்.

எம்ஏஎம் ராமசாமி செட்டியாரின் சகோதரர் குமாரராஜா எம்ஏஎம் முத்தையா செட்டியாரின் 87-வது பிறந்த நாள் நினைவு பரிசளிப்பு விழா, சென்னை ராணி மெய்யம்மை மன்றத்தில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில், டாக்டர் எம்ஏஎம் ராமசாமி அறக்கட்டளை சார்பில், மேற்கு தாம்பரத்தில் இயங்கி வரும், உதவும் உள்ளம் ஆதரவற்றோர் குழந்தைகள் காப்பகத்துக்கு ரூ.3 லட்சம் நிதி வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் பேசியதாவது:

தமிழகத்தின் தொன்மையான கோயில்களை புதுப்பித்ததிலும், பழைமையான நூல்களை பதிப்பித்ததிலும் செட்டிநாட்டரசர்களின் பங்களிப்பு முக்கியமானது. ஓவியம், சிற்பம், இலக்கியம் என அத்தனை கலைத்துறைகளிலும் சிறந்து விளங்கிய திறமைசாலிகளை அடையாளம் கண்டு ஊக்கு வித்தவர்கள் செட்டி நாட்டரசர்கள். அத்தகைய தொண்டின் ஒரு பகுதியாக குமாரராஜா செட்டியாரின் பிறந்த நாளன்று நலத்திட்ட உதவிகள் வழங்குவது மகிழ்ச்சி அளிக்கிறது.

மானுடம் சிறக்க மனிதம் சார்ந்த செயல்கள் தழைக்க வேண்டும். பாகுபாடுகள் கடந்த அன்புதான் மனிதமாகும். எனவே, அன்பை ஆதாரமாக்கி வாழ வேண்டும். இறைமையை அடைய சுயத்தை இழக்க வேண்டும்.

அப்போதுதான் தன்னை மறந்து பிறர் நலத்துக்காக செயல்பட முடியும். அன்பு என்னும் தத்து வத்தைத்தான் எல்லா உபநிடதங் களும், மறைகளும் போதிக் கின்றன. அந்த அன்பை போற்று கிற வகையில், உதவும் உள்ளம் நிறுவனர் லட்சுமி போன்றோரை அங்கீகரிக்கும் வகையில் நடக்கின்ற இந்த நிகழ்ச்சியில் பங் கேற்றது பெருமை அளிக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் குமாரராஜா செட்டியாரின் பிறந்த நாள் உரையை பேராசிரியர் எம்.ராமச்சந்திரன் ஆற்றினார். உதவும் உள்ளம் நிறுவனர் லட்சுமி ஏற்புரையாற்றினார். முன்னதாக எம்ஏஎம் ராமசாமி வரவேற்று பேசினார். உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன், தொழிலதிபர்கள் ஏ.சி.முத்தையா, நல்லி குப்புசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT