வாயலூரில் பாலாற்றின் குறுக்கே அமைந்துள்ள தடுப்புச்சுவர். படம்: கோ.கார்த்திக் 
தமிழகம்

வாயலூரில் கடல் முகத்துவாரம் அருகே பாலாற்றின் குறுக்கே தடுப்புச்சுவரை உயர்த்த வேண்டும்: விவசாயிகள், கிராம மக்கள் கோரிக்கை

செய்திப்பிரிவு

வாயலூரில் கடல் முகத்துவாரம் அருகே பாலாற்றின் குறுக்கே 5 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புச்சுவரின் உயரத்தை 7 அடியாக உயர்த்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

கல்பாக்கத்தை அடுத்த வாயலூரில் கடல் முகத்துவாரப் பகுதியில் பாலாற்றின் குறுக்கே அணுமின் நிலைய நிர்வாகம் ரூ.32 கோடி நிதியில் 5 அடி உயரத்தில் தடுப்புச்சுவரை அமைத்துக் கொடுத்தது. கடந்த ஆண்டுஇறுதியில் பெய்த கனமழையின்போது 5 அடி உயரத் தடுப்புச் சுவரையும் கடந்து, பாலாற்று நீர் கடலில் கலந்தது.

இந்நிலையில், 5 அடி உயரத் தடுப்புச்சுவரை இன்னும் 2 அடி உயர்த்தினால், கூடுதலாக படுகையில் தண்ணீர் சேமிக்க முடியும் என்பதால், அதற்கான பணிகளை பொதுப்பணித் துறையினர் மேற்கொள்ள வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

இதுகுறித்து, இப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கூறியதாவது: தடுப்புச்சுவர் மூலம் பாலாற்றுப் படுகையில் நீர் சேமிக்கப்பட்ட பின்பு, கரையோரகிராமங்களில் சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு குடிநீர் தட்டுப்பாடு குறைந்துள்ளது.

மேலும், கல்பாக்கம் நகரியப் பகுதியின் குடிநீர் தேவையும் 100 சதவீதம் பூர்த்தியடைந்துள்ளது. எனினும், பாசனத் தேவைக்கான தண்ணீர் தட்டுப்பாடு தொடர்கிறது. அதனால், தற்போதுள்ள தடுப்புச் சுவரை 7 அடியாக உயர்த்தினால் கூடுதலாக பாலாற்றில் நீரை சேமிக்க முடியும். அணுமின் நிலைய நிர்வாகம், தடுப்புச்சுவரின் பயனை ஆய்வுசெய்து சுவரின் உயரத்தை அதிகரிப்போம் என ஏற்கெனவே தெரிவித்திருந்தது. அதனால், அணுமின் நிலைய நிர்வாகம் மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் தடுப்புச் சுவரை உயர்த்தி அமைக்கவும் கரைகளை பலப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

SCROLL FOR NEXT