தமிழக பாஜகவினர் உள்ளூர் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா அறிவுறுத்தியுள்ளார்.
தமிழக பாஜக தலைவராக எல்.முருகன் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக மாநில செயற்குழு கூட்டம் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக மாநிலத் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் மாநிலத் தலைவர் எல்.முருகன் குத்துவிளக்கேற்றி செயற்குழுவை தொடங்கி வைத்தார். மூத்த தலைவர் இல.கணேசன், மாநிலப் பொதுச் செயலாளர் கே.டி.ராகவன், கரு.நாகராஜன் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். மற்ற மாவட்டங்களில் உள்ள செயற்குழு உறுப்பினர்கள் காணொலி காட்சி மூலம் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் இருந்து அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, பொதுச் செயலாளர் பி.முரளிதரராவ் ஆகியோர் காணொலி காட்சி மூலம் பங்கேற்றனர்.
அப்போது காணொலி காட்சி மூலம் ஜே.பி.நட்டா பேசியதாவது:
தமிழக பாஜக செயற்குழு கூட்டத்தில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். மாநிலத் தலைவர் எல்.முருகன் தலைமையிலான குழுவினர் மிகச்சிறப்பான முறையில் கட்சிப் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு பாராட்டுகள். தமிழகத்தில் பாஜக வளர்ச்சியடைந்து வருகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற கிராமப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக கணிசமான இடங்களில் வென்றது. அடுத்து வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கணிசமான இடங்களில் வெல்லும்.
அதற்கு நாம் இப்போதிருந்தே உழைக்க வேண்டும். பாஜக தேசியத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கட்சி என்றாலும்உள்ளூர் பிரச்சினைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். உள்ளூர் மக்கள்பிரச்சினைகளுக்கு சமூக ஊடகங்களிலும், களத்திலும் உறுதியுடன் போராட வேண்டும். அப்போதுதான் தமிழகத்தில் பாஜகவின் வாக்கு வங்கியை அதிகரிக்க முடியும்.
பிரதமர் மோடி அரசின் சாதனைகளை நாம் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். அதற்கு சமூக ஊடகங்களை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும். பாஜகவின் சமூக ஊடகப் பிரிவு மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும்.
கரோனாவுக்கு சிகிச்சை அளிக்க நாடெங்கும் 1,500 கரோனா சிறப்பு மருத்துவமனைகள், 12 லட்சத்து 50 ஆயிரம் படுக்கை வசதிகள், 50 ஆயிரம் வென்டிலேட்டர்கள் என்று மருத்துவ கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. விடுதலைக்குப் பிறகு இப்போதுதான் முதல் முறையாக புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. ஏழை - பணக்காரர் வித்தியாசமின்றி அனைவருக்கும் கல்வி கிடைப்பதையும், தாய்மொழிக் கல்வியையும் புதிய கல்விக் கொள்கை உறுதி செய்கிறது. இதுபற்றியெல்லாம் பாஜகவினர் மக்களிடம் பிரச்சாரம் செய்ய வேண்டும்.
தமிழகத்தின் எதிர்க்கட்சியான திமுக தேசிய உணர்வுகளுக்கு எதிரானதாக உள்ளது. நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானவர்களின் புகலிடமாக திமுக உள்ளது. எனவே, திமுகவுக்கு நல்ல பாடம் கற்பிக்க வேண்டும். முருகப் பெருமானை இழிவுபடுத்திய யூ-டியூப் சேனலுக்கு எதிராக சமூக ஊடகங்களில் நடத்திய போராட்டம் வென்றது. அதுபோல ஒவ்வொரு பிரச்சினையிலும் பாஜகவினர் போராட வேண்டும்.
இவ்வாறு ஜே.பி.நட்டா பேசினார்.