திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், தனது ட்விட்டர் பக்கத்தில் விநாயகர் படத்தை வெளியிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்பு விநாயகர் சதுர்த்தியின்போது, திமுக பொருளாளராக இருந்த மு.க.ஸ்டாலினின் ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துச் செய்தி வெளியாகியிருந்தது. அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதால், அந்த வாழ்த்துச் செய்தியை தனக்கு தெரியாமல் தனது ட்விட்டர் பக்கத்தை நிர்வகிப்பவர் வெளியிட்டு விட்டதாக ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.
திமுக இந்து விரோத கட்சி என்று பாஜகவினர் முன்வைத்த விமர்சனங்களுக்கு பதிலளித்த ஸ்டாலின், ‘திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி அல்ல. திமுகவில் 1 கோடி இந்துக்கள் உள்ளனர். அனைவரும் சமம் என்ற சமூகநீதி கோட்பாடுதான் திமுகவின் அடிப்படை கொள்கை’ என்று விளக்கம் அளித்தார். சமீபத்தில் கந்த சஷ்டி கவசம் பாடலை இழிவுபடுத்தும் வகையில் யூ-டியூப் சேனல் ஒன்றில் வீடியோ வெளியிடப்பட்டதற்கு திமுக சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
நிர்வாகிகள் வாழ்த்து
கடந்த 22-ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. அன்று திமுக எம்.பி., எம்எல்ஏக்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலரும் சமூக ஊடகங்களில் வாழ்த்து தெரிவித்திருந்தனர். பல இடங்களில் விநாயகர் படத்துடன் வாழ்த்து தெரிவித்து சுவரொட்டிகள், பதாகைகளை திமுகவினர் வைத்திருந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு 1.50 மணிக்கு திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், எருக்கம் பூ மாலை அணிவிக்கப்பட்ட, மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலையை ஒருவர் கையில் ஏந்தியிருப்பது போன்ற படத்தை வெளியிட்டிருந்தார். அதில் சிலையை வைத்திருப்பவரின் முகம் தெரியவில்லை.
உதயநிதி வெளியிட்ட இந்தப் படம் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி பெரும் சர்ச்சையையும், விவாதத்தையும் கிளப்பியுள்ளது. திராவிடர் கழகத்தை சேர்ந்தவர்களும், பெரியாரிய கொள்கையாளர்களும், ‘சமரசமற்ற பகுத்தறிவுக் கொள்கை, சமூகநீதி கொள்கை ஆகியவற்றுக்காகவே திமுகவுக்கு மக்கள் வாக்களிக்கின்றனர். எனவே, கொள்கையில் சமரசம் கூடாது’ என்று கடுமையாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
‘ஒரு பக்கம் இந்து மத எதிர்ப்பு, மறு பக்கம் இந்து கடவுளுக்கு ஆதரவுபோல திமுகவினர் நடித்து மக்களை ஏமாற்ற பார்க்கின்றனர்’ என பாஜக ஆதரவாளர்கள் சமூக ஊடகங்களில் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.
‘மகள் விரும்பியதால் பகிர்ந்தேன்’
உதயநிதி ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
எனக்கோ, என் மனைவிக்கோ கடவுள் நம்பிக்கை கிடையாது. ஆனால், என் தாயாருக்கு நம்பிக்கை உண்டு. பிள்ளையார் சதுர்த்திக்காக அம்மா ஒரு பிள்ளையார் சிலை வாங்கினார். அதை பார்த்த என் மகள், ‘‘இந்த சிலையை எப்படி செய்வார்கள்?’’ என்றார். ‘‘இது களிமண்ணில் செய்தது. தண்ணீரில் கரைக்க எடுத்துச் சென்றுவிடுவார்கள்’’ என்றேன். ‘‘கரைப்பதற்கு முன்பு சிலையுடன் ஒரு போட்டோ எடுத்துக் கொடுங்கள்’’ என்றார். அவரது விருப்பத்தால் நான்தான் அந்த புகைப்படத்தை எடுத்தேன். மகள் ரசித்த அந்த சிலையை அவரது விருப்பத்துக்காக ட்விட்டரில் பகிர்ந்தேன்.