திமுக எம்.பி.யும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது மகன் மீதான எப்ஐஆரை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில், சிபிசிஐடி போலீஸார் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜெகத்ரட்சகன் குரோம்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தை வாங்கியது தொடர்பாக தாஸன் என்பவர் கொடுத்த புகாரின்பேரில் சிபிசிஐடி போலீஸார் ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது மகன் மீது 2 வழக்குகளை பதிவு செய்துள்ளனர். இந்த எப்ஐஆர்-களை ரத்து செய்யக் கோரியும், விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கக் கோரியும் ஜெகத்ரட்சகன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணை நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பாக நடந்தது. அப்போது அரசு தரப்பில் மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன் ஆஜராகி, “கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது எம்.பி.ஜெகத்ரட்சகனின் மகன் விசாரணைக்கு ஆஜராகி ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என இந்த நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.ஆனால் அவர் அந்த உத்தரவைமதிக்கவில்லை. தனது வழக்கறிஞர் மூலமாக கடிதம் அனுப்பியுள்ளார். இந்த மோசடியில் 240 ஏக்கர் நிலம் மற்றும் 9 ஆயிரம் ஆவணங்கள் தொடர்பாக விரிவாக விசாரி்க்க வேண்டியுள்ளதால் வழக்கை ரத்து செய்யக் கூடாது. இதுதொடர்பாக பதில்மனு தாக்கல் செய்யப்படும்” என வாதிட்டார்.
இதையடுத்து நீதிபதி, இதுதொடர்பாக சிபிசிஐடி போலீஸார் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை செப்.10-க்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளார்.