கரோனா பாதிப்பு குறைந்த பிறகேஅரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் புதிய ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடங்கப்படும் என போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் 1 லட்சத்து 30 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். ஏற்கெனவே போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஊதிய முரண்பாடு, ஓய்வுபெற்ற மற்றும் தற்போது பணியாற்றி வரும் தொழிலாளர்களுக்கான நிலுவைத் தொகை வழங்கவில்லை என புகார் எழுந்துள்ளது. பழைய ஊதிய ஒப்பந்தம் முடிந்து, 2 ஆண்டுகள் நெருங்கவுள்ளது. எனவே, 14-வது புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்துவது குறித்து தொமுச, சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சார்பில் நிர்வாகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘கரோனா ஊரடங்கால் அரசு பேருந்துகள் நீண்ட நாட்களாக ஓடாமல் பெரும் வருவாய் இழப்பை சந்தித்து வருகின்றன. மற்றொரு புறம் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு பல்வேறு துறைகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறது.
இதற்கிடையே, தமிழக போக்குவரத்து ஊழியர்களின் பழைய ஊதிய ஒப்பந்தம் முடிந்து 2 ஆண்டுகள் நெருங்கவுள்ளதால், தொழிற்சங்கங்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, கரோனா பாதிப்பு குறைந்த பிறகு, தொழிலாளர்களின் புதிய ஊதிய ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தையை தொடங்க வாய்ப்புள்ளது’’ என்றனர்.