கரோனா தடுப்புப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலர் கே.சண்முகம், காணொலி காட்சி மூலம் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் டிஜிபி ஜே.கே.திரிபாதி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை செயலர் அதுல்ய மிஸ்ரா, சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், பொதுத் துறை முதன்மைச் செயலர் செந்தில்குமார், தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழக மேலாண் இயக்குநர் உமாநாத், சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ், மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் பங்கேற்றனர். 
தமிழகம்

இ-பாஸை ரத்து செய்தால் தொற்று அதிகரிக்கும்; கரோனா பரிசோதனைகளை அதிக அளவில் செய்ய வேண்டும்: ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலர் அறிவுறுத்தல்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்தால் தொற்று பரவல் அதிகரிக்கும். எனவே, கரோனா பரிசோதனைகள், காய்ச்சல் முகாம்களை அதிகரிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலர் கே.சண்முகம் அறிவுறுத்தினார்.

தமிழகத்தில் தினமும் சுமார் 6 ஆயிரம் என்ற அளவில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுவரை 3.85 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 3.25 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் என கடந்த ஜூலை இறுதியிலேயே மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியிருந்தது.

ஆனால், தமிழகத்தில் ரத்து செய்யப் படவில்லை. அதற்கு பதிலாக தற்போது விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து, இ-பாஸ் முறையை ரத்து செய்வது குறித்து தலைமைச் செயலருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியிருந்தது.

முக்கிய ஆலோசனை

இந்நிலையில், மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலர் கே.சண்முகம் நேற்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தி னார். இதில், டிஜிபி ஜே.கே.திரிபாதி, சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது ஆகஸ்ட் 31-க்குப் பிறகு ஊடரங்கை நீட்டிப்பது, கரோனா தடுப்புப் பணிகள், இ-பாஸ் நடைமுறை குறித்து விவாதிக்கப்பட்டது. அதன்பின், தலைமைச் செயலர் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார்.

கரோனா தொற்று அதிகம் பரவும் நிலையில், இ-பாஸை ரத்து செய்தால் தமிழகத்தில் தொற்று மேலும் அதிகரிக்கும். எனவே, மாவட்டங்களில் கரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும். உயிரிழப்பை குறைக்க வேண்டும். காய்ச்சல் முகாம்களை அதிக அளவில் நடத்தி, பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து சிகிச்சை அளிப்பதை உறுதி செய்ய வேண்டும்.

அதிகரிக்க வாய்ப்பு

கரோனா பரிசோதனைகள் அதிகரிக் கப்படும்போது பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால், மருத்துவமனைகளில் தேவையான அளவு படுக்கை வசதி, ஆக்ஸிஜன் வசதி, வெண்டிலேட்டர் வசதி களை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட அறிவுறுத்தல்களை தலைமைச் செயலர் வழங்கியுள்ளார்.

இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்வதா, வேண்டாமா என்பது குறித்து முதல்வர் பழனிசாமியுடன் தலைமைச் செயலர் கே.சண்முகம் ஆலோசனை நடத்த உள்ளார். அதன்பின், இறுதி முடிவு அறிவிக்கப்படும் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

அமைச்சர் தகவல்

இதனிடையே, சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ‘‘இ-பாஸ் முறை குறித்த வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளும்படி தலைமைச் செயலருக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

முதல்வரும் கள ஆய்வுகள் மேற் கொண்டுள்ளார். கள ஆய்வுகள், கள நிலவரங்கள் மற்றும் மத்திய அரசின் வழிகாட்டுதல்கள்படி இ-பாஸ் முறை தொடர்பான அறிவிப்பை விரைவில் முதல்வர் வெளியிடுவார்’’ என்றார்.

SCROLL FOR NEXT