கணவன், மனைவி தாக்கப்பட்ட விவகாரத்தில் 22 நாட்கள் ஆகியும் குற்றவாளிகள் கைது செய்யப்படாததால் கிராம மக்கள் காவல் நிலையம் முன் கண்டித்து நடத்திய போராட்டத்தில் உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதியும் கலந்துகொண்டு போராட்டம் நடத்திய விவகாரத்தில் மாநில மனித உரிமை தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து மாவட்ட எஸ்.பி.க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் பூலாங்குறிச்சியைச் சேர்ந்த செந்திலும், அவரது மனைவி பிரியதர்ஷினியும் ஆகஸ்ட் 1-ம் தேதி தாக்கப்பட்டதில், கை எலும்பு முறிந்து செந்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கணவன், மனைவியைத் தாக்கிய பிரகாஷ் மற்றும் அவரது உறவினர்கள் மீது அளித்த புகாரில் அன்றைய தினமே, பூலாங்குறிச்சி காவல் நிலையத்தினர் வழக்குப் பதிவு செய்தனர்.
அதன்பின்னர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் சிவகங்கை எஸ்.பி. ஆகியோரிடம் கிராம மக்கள் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
22 நாட்களாக புகார் மீது நடவடிக்கை எடுக்காததால், பூலாங்குறிச்சி காவல் நிலையம் முன்பு கிராம மக்கள் பலரும் திரண்டு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அனைவரையும் பரபரப்பூட்டிய விஷயமாக சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.செல்வம் போராட்டத்தில் ஈடுபட்டது வைரலானது. இது தொடர்பான செய்தி அனைத்து ஊடகங்களிலும் வெளியானது.
ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியையே போராட வைத்த விவகாரம் தமிழகம் முழுவதும் எதிரொலித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மாவட்டக் காவல்துறை உடனடியாக சம்பந்தப்பட்ட ஸ்டேஷனின் உதவி ஆய்வாளரை இடமாற்றம் செய்தது. மாவட்ட நிர்வாகம் மற்றும் எஸ்.பி. நேரில் சென்று முன்னாள் நீதிபதி செல்வத்திடம் நடத்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்தனர். இனி இதுபோன்று நேராமல் பார்த்துக்கொள்வதாகத் தெரிவித்தனர்.
இந்நிலையில் இந்தச் செய்தியை தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்து (suo-motu) விசாரணைக்கு எடுத்துள்ளது. ஆணையப் பொறுப்புத் தலைவரான துரை. ஜெயச்சந்திரன், இந்த விவகாரம் குறித்து சிவகங்கை மாவட்ட எஸ்.பி. 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.