தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 22-ம் தேதி தமிழக முதல்வரால் தொடங்கப்பட்டது. மாவட்டத் தலைநகரான தென்காசியில் அரசு சுவர்கள் போஸ்டர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையை மாற்ற தென்காசி காவல்துறை, நகராட்சி மற்றும் வருவாய்த்துறை சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில், பொதுநல அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தோர், தன்னார்வலர்கள் கலந்துகொண்டனர்.
இதில், பொது இடங்களில் இனிமேல் போஸ்டர்கள் ஒட்டக்கூடாது என்றும், போஸ்டர்கள் ஒட்ட தனியாக இடம் ஒதுக்கித் தரப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. மேலும், அரசு சுவர்களில் ஒட்டப்பட்ட போஸ்டர்களை அகற்றிவிட்டு, அந்த பகுதிகளில் ஓவியங்கள் வரைந்து நகரை அழகுபடுத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, கடந்த சில வாரங்களாக ஞாயிற்றுக்கிழமைகளில் களப்பணி நடைபெற்று வருகிறது. முதல்கட்டமாக, சாலையோர மரங்களில் ஆணி அடித்து அமைக்கப்பட்ட விளம்பர பலகைகளையும், மரத்தில் அடிக்கப்பட்ட ஆணிகளையும் அகற்றி வருகின்றனர்.
மேலும், தென்காசி புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், நகராட்சி பூங்கா, பேருந்து நிறுத்தங்களில் உள்ள நிழற்குடைகள், தண்ணீர் தொட்டிகளில் ஒட்டப்பட்ட போஸ்டர்களை கிழித்தனர்.
சுவர்களை சுத்தம் செய்து, சுண்ணாம்பு அடித்தனர். ஓவியம் வரைவதில் ஆர்வம் உள்ள மாணவ, மாணவிகளை அழைத்து, சுவர்களில் ஓவியங்களை தீட்டச் செய்தனர்.
இயற்கைக் காட்சிகள், பாரம்பரிய விளையாட்டுகள், விழிப்புணர்வு கருத்துகள் போன்றவற்றை மாணவ, மாணவிகள் ஓவியங்களாக வரைந்து, சுத்தப்படுத்தப்பட்ட சுவர்களுக்கு மெருகூட்டினர். தாங்கள் வரைந்த ஓவியங்களுக்கு அருகில் தங்கள் பெயர், படிக்கும் பள்ளி போன்ற விவரங்களையும் மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனர். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் இந்தப் பணியில் தன்னார்வலர்கள் தாமாக முன்வந்து, தென்காசியை அழகாக்கும் பணியில் தங்களை ஈடுபடுத்தி வருகின்றனர்.
நகரை அழகுபடுத்த ஆர்வம் உள்ள அனைவரும் இதில் பங்கேற்குமாறு இந்த பணியை முன்னெடுத்துச் செல்லும் ப்ராணா மரம் வளர் அமைப்பு, மழை நண்பர்கள், என்எப்எஸ் டிரஸ்ட், அறம் அமைப்பு, விதைகள் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்புகளைச் சேர்ந்தோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும், தங்கள் பங்களிப்பை செலுத்த முடியாதவர்கள் குறைந்தபட்சம் அரசு சுவர்களில் போஸ்டர்கள் ஒட்டுவது, மரங்களில் ஆடி அடித்து விளம்பர பலகைகளை தொங்க விடுவது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர். ஒவ்வொரு ஊரிலும் தன்னார்வலர்களும், பொதுமக்களும் இதுபோன்ற பணிகளில் ஈடுபட்டால் கிராமங்கள், நகரங்கள் சுத்தமாவதுடன் அழகும் பெறும்.