தமிழகம்

சினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளிப்பது குறித்து விரைவில் நல்ல முடிவு: அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்

ரெ.ஜாய்சன்

சினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளிப்பது குறித்து விரைவில் முதல்வர் நல்ல முடிவை எடுப்பார் என, தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தெரிவித்தார்.

தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு இன்று அவர் அளித்த பேட்டி: சினிமா மற்றும் சின்னத்திரை படபிடிப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு நேற்று தான் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு ஒரு மாதத்துக்கு முன்பே சில வழிகாட்டு நெறிமுறைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சினிமா படபிடிப்பு என்பது தமிழகம் மட்டுமல்ல எந்த மாநிலத்திலும் இன்னும் தொடங்கப்படவில்லை.

மத்திய அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகள் அடிப்படையில் சினிமா படபிடிப்புகளுக்கு அனுமதி அளிப்பது குறித்து தமிழக முதல்வர் விரைவில் நல்ல முடிவை எடுப்பார். எனவே, சினிமா படபிடிப்புகளுக்கு அனுமதியளிக்கக்கூடிய நல்ல சூழ்நிலை விரைவில் உருவாகும்.

அரசு விழாக்களுக்கு எதிர்கட்சி மற்றும் மாற்றுக் கட்சிகளை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் அழைக்கப்படுவதில்லை என கனிமொழி எம்பி கூறியிருப்பது தவறான குற்றச்சாட்டாகும்.

அனைத்து அரசு விழாக்களுக்கான அழைப்பிதழ்களிலும் கனிமொழி எம்பி உள்ளிட்ட அனைத்து மக்கள் பிரதிநிதிகளின் பெயர்களும் இடம்பெறுகின்றன.

தற்போது கரோனா ஊரடங்கு காரணமாக அழைப்பிதழ்கள் அச்சிடப்படுவதில்லை. விழாக்களும் சமூக இடைவெளியுடன் கட்டுப்பாடுகளுடன் நடைபெறுகின்றன.

இருப்பினும் அனைத்து மக்கள் பிரதிநிதிகளுக்கும் முறையாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. கனிமொழி அரசியலுக்காக இந்த தவறான குற்றச்சாட்டை கூறி வருகிறார்.

திரைப்படங்களை ஓடிடி தளத்தில் வெளியிடுவது சினிமா துறைக்கு ஆரோக்கியமானது அல்ல. இந்த பிரச்சினை தொடர்பாக சினிமா தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம், திரையரங்கு உரிமையாளர் சங்கம் ஆகியவை ஒன்றாக அமர்ந்து பேசி சுமூகமாக தீர்வு காண வேண்டும். இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு அரசின் உதவியை நாடினால், உதவி செய்ய தயாராக இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT