பிரதிநிதித்துவப் படம் 
தமிழகம்

ஆகஸ்ட் மாதம் வரையிலான நிலவரப்படி திருச்சி மாவட்டத்தில் கடந்தாண்டைவிட அதிக மழை பதிவு

ஜெ.ஞானசேகர்

திருச்சி மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதம் வரையிலான நிலவரப்படி கடந்த ஆண்டைக் காட்டிலும் நிகழாண்டில் அதிக மழை பெய்துள்ளது.

திருச்சி மாவட்டத்தில் குளிர் காலத்தில் (ஜனவரி, பிப்ரவரி) 13.94 மி.மீ., கோடைக்காலத்தில் (மார்ச், ஏப்ரல், மே) 125.13 மி.மீ., தென்மேற்கு பருவ மழை (ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர்) மூலம் 221.74 மி.மீ., வட கிழக்குப் பருவமழை (அக்டோபர், நவம்பர், டிசம்பர்) மூலம் 427.31 என ஆண்டுக்கு சராசரியாக 788.08 மி.மீ. மழை பெய்யும்.

திருச்சி மாவட்டத்தில் ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான இயல்பான மழை அளவு 272 மி.மீ. ஆனால், நிகழாண்டில் ஆக.23-ம் தேதி வரை 316 மி.மீ. மழை பெய்துள்ளது. இது, கடந்தாண்டில் இதே காலக் கட்டத்தில் 240 மி.மீ. ஆக இருந்தது.

புள்ளம்பாடியில் 120.88 மி.மீ.

திருச்சி மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முதலே மாதத்துக்குக் குறைந்தது ஒருமுறையாக நல்ல மழை பெய்து வருகிறது. மே, ஜூன், ஜூலை மாதங்களைத் தொடர்ந்து நிகழ் மாதமும் மழை பெய்து வருகிறது. ஏப்.10-ம் தேதி முதல் ஆக.23-ம் தேதி வரை கடந்த நான்கரை மாதங்களில் 18 முறை மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில், திருச்சி மாவட்டத்தில் நேற்று (ஆக.23) இரவு பலத்த மழை பெய்தது. இன்று காலை நிலவரப்படி, திருச்சி மாவட்த்தில் மொத்தம் 922.70 மி.மீ. மழை பதிவாகியது. இதில் அதிகபட்சமாக புள்ளம்பாடியில் 120.80 மி.மீ., கல்லக்குடி 110.20 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

இந்த மழையால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சாலையெங்கும் குப்பைகள் மழைநீரில் அடித்துச் செல்லப்பட்டன. மழைநீர் வடிகால்கள், கழிவுநீர் சாக்கடைகள் அனைத்தும் நிரம்பி வழிந்தன. மாவட்டத்தில் உள்ள சுரங்கப் பாதைகளில் பெரும்பாலானவற்றில் தண்ணீர் வடிந்துவிட்ட நிலையில், பழைய சுரங்கப் பாதைகளில் தண்ணீர் வடியத் தொடங்கியுள்ளன.

மாவட்டத்தின் பிற இடங்களில் பெய்த மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்):

பொன்மலை, தேவிமங்கலம் 60, லால்குடி 57, சமயபுரம் 56, வாய்த்தலை அணைக்கட்டு 51, கோவில்பட்டி, மருங்காபுரி 45.20, துறையூர் 45, ஜங்ஷன் 40, நவலூர் குட்டப்பட்டு 39, நந்தியார் தலைப்பு 36.60, திருச்சி நகரம் 34, விமான நிலையம் 32.30, கொப்பம்பட்டி 32, சிறுகுடி 22.

SCROLL FOR NEXT