தமிழகத்தின் 2-வது தலைநகராக மதுரையை உருவாக்க வேண்டும் என்று முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார்.
திருநெல்வேலியில் நடைபெற்ற மண்டல அளவிலான பாஜக செயற்குழு கூட்டத்தில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் கரோனா காலத்தில் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக பாஜக செயல்பட்டுள்ளது. வரும் 2021 தமிழக சட்டப் பேரவை தேர்தலில் பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணிதான் ஆட்சி அமைக்கும்.
தற்போது அதிமுக கூட்டணியில் இருக்கிறோம். தேர்தல் நேரத்தில் உரிய முடிவு எடுக்கப்படும். வரும் சட்டப் பேரவை தேர்தலில் பாஜக குறைந்தபட்சம் இரட்டை இலக்க எண்ணிக்கையிலான இடங்களில் போட்டியிடும்.
எந்த காலத்திலும் டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது என்று தொடக்கத்திலிருந்தே தெரிவித்து வருகிறேன்.
திமுகவில் 90 சதவீதம் பேர் இந்துக்கள் என்று அக்கட்சி பிரமுகர் ஆர்.எஸ்.பாரதி சொல்லியிருக்கிறார். நெற்றியில் திருநீறு இருந்தால் திமுகவினர் அழிப்பதில்லை.
தமிழகத்தின் தலைநகரம் சென்னை ஆக இருக்கலாம். ஆனால், தமிழின் தலைநகரம் மதுரை தான். அதை யாரும் மாற்ற முடியாது.
மீனாட்சி ஆளும் மதுரை தமிழகத்தின் இரண்டாம் தலைநகரமாக வருவது சாலச்சிறந்தது. மதுரையை இரண்டாம் தலைநகரமாக அறிவித்தால் இப்போதைய சூழ்நிலைக்கு பல முன்னேற்றங்கள் ஏற்படும்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் விருப்பப்படி இரண்டாம் தலைநகரமாக மதுரையை உருவாக்க வேண்டும். இதை அதிமுக அரசுக்கு நான் கோரிக்கையாக வைக்கிறேன் என்று தெரிவித்தார்.