மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி இ-பாஸ் முறையை ரத்து செய்ய முதல்வர் கள ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும், விரைவில் அதனை அறிவிப்பார் என்றும் வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
சென்னை திருவிக நகர் மண்டலத்திற்குட்பட்ட பட்டாளத்தில் கரோனா பரிசோதனை மையத்தை வருவாய், பேரிடர் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார். பின்னர் காய்ச்சல் பரிசோதனை சிறப்பு மருத்துவ முகாமை ஆய்வு செய்த அமைச்சர் உதயகுமார், பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீரை வழங்கினார்.
இதன் பின்னர் நிருபர்களுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அளித்த பேட்டியில் கூறியதாவது:
''381-வது வயதைக் கடந்த சென்னை மாநகரத்துக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தென்மேற்குப் பருவமழை ஜூன் மாதம் தொடங்கி தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் சராசரியாக 252.2 மில்லி மீட்டர் மழை பெய்திருக்கிறது. இது சராசரியான அளவைவிட 28 சதவீதம் அதிகமாகும்.
பவானிசாகர், மணிமுத்தாறு, பெருஞ்சாணி, பெரியாறு, அமராவதி மற்றும் திருமூர்த்தி அணையில் கடந்த ஆண்டைவிட நீரின் கொள்ளளவு அதிகமாகக் கிடைத்திருக்கிறது. ஆனால் மேட்டூர், பாபநாசம், கிருஷ்ணகிரி, சோலையாறு அணையில் நீரின் கொள்ளளவு கடந்த ஆண்டை விட குறைவாக உள்ளது.
மேலும், சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் நீர்த்தேக்கங்களில் நீரின் இருப்பு கொள்ளளவு கடந்த ஆண்டை விட அதிகமாக உள்ளது நமக்கு ஆறுதல் அளிக்கிறது.
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் கரோனா பாதிப்பு தொற்றிலிருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. ஊரடங்கு காலத்தில் திருமண மண்டபங்கள் மூடியிருந்தாலும் திருமணங்கள் நடைபெற்றுதான் வருகின்றன.
கரோனா தொற்று நோய்க்கு மருந்து இன்னும் கண்டுபிடிக்காத நிலையில் இதய நோய், சர்க்கரை நோய், ரத்த அழுத்த நோயாளிகளுக்குப் பாதிப்பு ஏற்படும்போது அவர்களுக்குச் சிகிச்சை அளிப்பது சவாலாக இருக்கிறது. ஒரு உயிரிழப்பு கூட ஏற்படக்கூடாது என்று அதிக கவனம் செலுத்தி வருகிறோம்.
இ - பாஸ் முறை ரத்து செய்வது குறித்து இந்திய அரசின் வழிகாட்டுதலின்படி நடவடிக்கை எடுத்து வருகிறோம். முதல்வர் இதுகுறித்து கள ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். விரைவில் முதல்வர் அறிவிப்பை வெளியிடுவார்.
அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்டங்களின் வளர்ச்சி முக்கியம் என்கிற அடிப்படையில் அமைச்சர்கள் அவரவர் மாவட்டத்தைக் குறிப்பிட்டுப் பேச உரிமை இருக்கிறது. மக்களின் வாழ்க்கை, வளர்ச்சிக்காக வைக்கும் எந்தக் கோரிக்கையையும் தவறு என்று கூற முடியாது. உரிய நேரத்தில் முதல்வர், துணை முதல்வர் இதுகுறித்து முடிவெடுப்பார்கள்.
பட்டியலின ஊராட்சி மன்றத் தலைவருக்குத் தொடர்ந்து ஏற்பட்டு வரும் பாதிப்புகள் குறித்து புகார் பெறப்பட்டுள்ளது. விரைவில் இதுகுறித்து விசரனை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்''.
இவ்வாறு அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.