மின் உபயோக கணக்கீட்டு முறையை மற்றியமைக்கக் கோரி திமுக சார்பில் இன்று காரைக்காலில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
காரைக்கால் மின் துறை தலைமை அலுவலகம் முன்பு இன்று (ஆக.24) நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்குக் கட்சியின் காரைக்கால் அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எம்.ஹெச்.நாஜிம் தலைமை வகித்தார்.
கரோனா தடுப்பு நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை, எளிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு மின்சார கணக்கீட்டு முறையை மாற்றியமைத்துக் கட்டணம் வசூலிக்க வேண்டும், கரோனா பாதிப்பு காலத்திற்குரிய மின் கட்டணத்தை ஆறாக பிரித்து வசூலிக்க வேண்டும், மின்துறையை தனியார்மயமாக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், புதுச்சேரி மாநில அரசை சுதந்திரமாக செயல்பட விடாமல் தடுக்கும் துணைநிலை ஆளுநரைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
சட்டப்பேரவை உறுப்பினர் கீதா ஆனந்தன் உள்ளிட்ட திமுகவினர் திரளானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
பின்னர் ஏ.எம்.ஹெச்.நாஜிம் செய்தியாளர்களிடம் கூறுகையில், "கரோனா பாதிப்பு காரணமாக மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். உலகின் பல நாடுகள் தங்கள் மக்களுக்குப் பொருளாதார உதவிகளை செய்து வருகின்றன. ஆனால், நமது மத்திய அரசு மக்களிடமிருந்து சுரண்டிக் கொண்டிருக்கிறது. புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ்-திமுக கூட்டணி அரசு என்று சொல்வதை விட, இங்கே குடியரசுத் தலைவர் ஆட்சிதான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
துணைநிலை ஆளுநர் என்ற தனி மனிதரின் ஆதிக்கம் நடந்து கொண்டிருக்கிறது. மக்களுக்கான பிரச்சினைகள் குறித்து அரசு தட்டிக்கேட்க முற்பட்டாலும், துணைநிலை ஆளுநர் அதிகாரிகளின் துணையுடன் அரசின் குரல் வளையை நசுக்குகிறார்.
மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று கூட கேட்கவில்லை, கணக்கீட்டு முறையை மாற்ற வேண்டும் என்றுதான் திமுக கோரிக்கை வைத்தது. அதை கூட அதிகாரிகள் செய்ய மறுக்கிறார்கள். மக்களுக்கு சிரமமில்லாத வகையில் மின் கட்டண கணக்கீட்டு முறையை மாற்றி அமைப்பது குறித்த பல ஆலோசனைகளை தெரிவிக்க தாயாராக உள்ளோம். இது குறித்து முதல்வரும், மின் துறை அமைச்சரும் தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், புதிதாக உயர்த்தப்பட்ட மின் கட்டண விகிதத்தை சுமூகமான சூழல் ஏற்படும் வரை அமல்படுத்த மாட்டோம் என்ற உறுதியை முதல்வர் அளிக்க வேண்டும். மின் துறையை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் முடிவு துரோகமிழைப்பதாகும்.
இதை எதிர்த்து, புதுச்சேரி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை, துணைநிலை ஏற்றுக் கொள்ளாமல் மத்திய அரசுக்கு அனுப்பியிருப்பது கண்டிக்கத்தக்கது. துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தமது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும். மக்களை அலட்சியப்படுத்தும் நோக்கில் துணைநிலை ஆளுநர் நேற்று பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது" என்றார்.