பிரதிநிதித்துவப் படம் 
தமிழகம்

புதுச்சேரியில் கரோனா தொற்றிலிருந்து 63 சதவீதத்தினர் குணமடைந்தனர்

செ.ஞானபிரகாஷ்

கரோனாவால் வருவாய் குறைந்துள்ள நிலையில் மத்திய அரசு எந்த நிவாரணமும் தரவில்லை என புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாரா குற்றம்சாட்டியுள்ளார்.

நாட்டிலேயே அதிகமாக கரோனா தொற்று பரவும் பகுதியாக புதுச்சேரி மாறி உள்ளது. இதனால் தினமும் ஏராளமானவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டு வருவதால் உயிரிழப்பும் அதிகரித்துள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு அமைச்சர்கள் கந்தசாமி, கமலக்கண்ணன், எம்எல்ஏ ஜெயபால் ஆகியோர் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இந்நிலையில், திமுகவைச் சேர்ந்த எம்எல்ஏ சிவாவுக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

கரோனா தொடர்பாக சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் இன்று (ஆக.24) கூறுகையில், "புதுச்சேரியில் இன்று 345 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. புதுவையில் 5 பேர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 164 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.51 சதவீதமாக உள்ளது.

சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார்

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 10 ஆயிரத்து 859 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 6,942 பேர் (63.93 சதவீதம்) குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

புதுவையில் 1,954 பேர், காரைக்காலில் 57 பேர், ஏனாமில் 46 பேர் என 2,057 பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதேபோல், புதுவையில் 1,550 பேர், காரைக்காலில் 94 பேர், ஏனாமில் 50 பேர், மாஹேவில் 2 பேர் என மொத்தம் 1,696 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்" என்று தெரிவித்தார்.

சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவிடம் கேட்டதற்கு, "வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை புதுச்சேரியில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. புதுவையில் சனி, ஞாயிறு ஆகிய 2 நாட்கள் ஊரடங்கு பிறப்பித்தால் பொதுமக்கள் நடமாட்டமும் குறையும். இதை நான் வலியுறுத்த உள்ளேன்.

அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்

கரோனாவால் புதுவை அரசின் வருவாய் குறைந்துள்ளது. 50 சதவீதம்தான் வருவாய் வருகிறது. மத்திய அரசு கூடுதலாக எந்த நிவாரணமும் தரவில்லை. ஜிஎஸ்டி நிலுவை தொகையும் தரப்படாமல் உள்ளது" என்று புகார் தெரிவித்தார்.

82 சுகாதார பணியாளர்கள் பாதிப்பு

இச்சூழலில் சுகாதாரத்துறையிலிருந்து தனக்கு வந்த புகாரை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி வாட்ஸ் அப்பில் பகிர்ந்திருந்தார்.

கிரண்பேடி

அதில், "புதுச்சேரியில் 82 சுகாதாரப் பணியாளர்களுக்குக் கரோனா தொற்றுள்ளது. அதில் ஒருவர் இறந்துள்ளார். புதுச்சேரியில் மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு ஏன் தனி வார்டுகள் உருவாக்கப்படவி்ல்லை? தற்போது அனைத்து மாநிலங்களிலும் தனிவார்டு முறையுள்ளது. நிதி குறைவால் தனிவார்டு அமைக்கப்படவில்லையா அல்லது சுகாதாரத்துறையின் குறைபாடா என்ற கேள்வி எழுகிறது. இதில் முரண்பாடு என்னவென்றால் சுகாதாரத்துறை செயலாளரும் மருத்துவ முதுகலை படித்தவர் என்பதுதான்" என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT