ராமநாதபுரத்தில் நடைபெற்ற ரூ.300 கோடி மோசடி வழக்கில் போலீஸார் முதல் நிலை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாதது ஏன்? என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த பிரதீப் சக்கரவர்த்தி, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:
ராமநாதபுரத்தில் புள்ளியன் பின்டெக் எல்எல்பி என்ற பெயரில் நீதிமணி, ஆனந்த் ஆகியோர் நிதி நிறுவனம் நடத்தி வந்தனர். இந்த நிதி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால் ஒரு ஆண்டில் இரட்டிப்பு பணம் தருவதாக தெரிவித்தனர்.
இதை நம்பி 19.9.2019-ல் ரூ.50 லட்சம் முதலீடு செய்தேன். அதற்கு உடன்படிக்கை பத்திரம், தேதி குறிப்பிடாமல் ஒரு கோடி மதிப்புள்ள காசோலைகள் தந்தனர். ஒரு ஆண்டுக்கு முடிந்ததும் காசோலையை வங்கியில் கொடுத்து பணம் வாங்கிக்கொள்ளுமாறும் தெரிவித்தனர்.
இந்நிலையில் நீதிமணி, மேனகா, ஆனந்த் ஆகியோர் மீது ராமநாதபுரம் பஜார் போலீஸார், மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் மோசடி வழக்கு பதிவு செய்தனர். நீதிமணி, ஆனந்த் கைது செய்யப்பட்டனர். இவர்கள் பல இடங்களில் 750 பேருக்கு மேல் 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து ஏமாற்றியுள்ளனர்.
நீதிமணி, ஆனந்த் ஆகியோர் 60 நாளாக சிறையில் உள்ளனர். இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. இதனால் இருவரும் ஜாமீனில் வெளிவர வாய்ப்புள்ளது.
வெளிநாடு தப்பிச்செல்லவும் வாய்ப்புள்ளது. எனவே நீதிமணி உள்ளிட்டோர் மீதான மோசடி வழக்கை பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி பொங்கியப்பன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர்கள் ஏ.கண்ணன், பாஸ்கர் மதுரம் வாதிடுகையில், தமிழகம் முழுவதும் 800 பேரிடம் ரூ.300 கோடி அளவுக்கு பணம் வசூலித்து ஏமாற்றியுள்ளனர்.
இருப்பினும் போலீஸார் பொருளாதார குற்றங்களை தடுக்கும் சட்டத்தில் கீழ் வழக்கு பதிவு செய்யாமல் சாதாரண பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால் ஒரு வழக்கில் குற்றவாளிகள் ஜாமீனில் பெற்றுள்ளனர். போலீஸார் குற்றவாளிகளுக்கு சாதகமாக செயல்படுகின்றனர் என்றனர்.
அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், இந்த வழக்கை பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்ற டிஜிபிக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, இந்த வழக்கில் பெரிய அளவில் மோசடி நடைபெற்றுள்ளது. இதனால் இந்த வழக்கை நீதிமன்றம் கண்காணிக்கும். முதல் நிலை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாதது ஏன்? வழக்கின் தற்போதைய நிலை குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஆக. 31-க்கு நீதிபதி ஒத்திவைத்தார்.