தமிழகம்

வைகை அணை தூர்வாருவது கைவிடப்பட்டதா? - அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

வைகை அணையை ரூ.244 கோடியில் தூர்வாரும் திட்டம் கைவிடப்பட்ட நிலையில், செலவே இல்லாமல் தூர்வாரி அரசுக்கு ரூ.201 கோடி வருவாய் கிடைக்கக் கூடிய புதிய திட்டம் தயாரிக்கப்பட்டது. தற்போது இந்த திட்டமும் கைவிடப்படும் நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் முக்கிய நீர் ஆதாரமாக வைகை அணை உள்ளது. இந்த அணை தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே 1959-ம் ஆண்டு கட்டப்பட்டது. அதன் பின் தற்போது வரை தூர்வாரப்படவில்லை. அணையின் மொத்த உயரம் 71 அடி. இதன் கொள்ளளவு 6 ஆயிரத்து 91 மில்லியன் கனஅடியாகும். ஆனால், அணையில் ஆங்காங்கே மணல் மற்றும் மண் திட்டு காணப் படுவதால் கடந்த 10 ஆண்டுகளாக முழுமையான கொள்ளளவுக்குத் தண்ணீர் தேக்க முடியவில்லை. அதனால், தற்போது இந்த அணையின் மூலம் தேனி, மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களுக்கு போதிய நீர் கிடைக்கவில்லை.

அணையைத் தூர்வார உத்தே சிக்கப்பட்ட 2 திட்டங்களும் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இனி மேலும் தாமதிக்காமல் தூர்வாரும் திட்டத்தைச் செயல்படுத்த அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகள் சிலர் கூறி யதாவது:

வைகை அணை தூர்வாரப் பட்டால் 868 மில்லியன் கனஅடி கூடுதல் தண்ணீரைத் தேக்க முடியும். ஆரம்பத்தில் ரூ.244 கோடியில் வைகை அணையை தூர்வாரும் திட்டம் தயாரிக்கப்பட்டது. அதற் கான ஆய்வுகள் நடந்து வந்த நிலையில் நிதிப் பற்றாக்குறையால் அந்தத் திட்டத்துக்கு அரசு ஒப்புதல் வழங்கவில்லை. அதற்கு மாற்றுத்திட்டமாகச் செலவே இல்லாமல் தூர்வாரும் திட்டம் குறித்தும், அதில் அரசுக்கு ரூ.201 கோடி வருவாய் கிடைக்கும் வழிமுறைகள் பற்றியும் மதுரை பெரியாறு வைகை வடிநிலப் பொதுப்பணித் துறை அதிகாரிகள் அறிக்கை அளித்தனர். இது தொடர்பாகவும் ஆய்வு நடந்தது. ஆனால், இத்திட்டம் தொடர்பாக அரசு எந்த பதிலும் கூறவில்லை.

சட்டப்பேரவை தேர்தல் நெருங் கும் நிலையில் இதுவரை எந்த ஒரு ஒப்புதலும் தராததால் இந்தத் திட்டம் கிட்டத்தட்ட கை விடப்பட்டதாகவே கருதுகிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

ஆனால், உயர் அதிகாரி ஒரு வரிடம் கேட்டபோது, தூர்வாரும் திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது என்றார்.

SCROLL FOR NEXT