கரோனா தொற்றினைத் தடுக்கும் வகையில் நேற்று தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறையில் நீராடி, சங்கமேஸ்வரரை வழிபாடு செய்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எங்கள் குலதெய்வமான சிவகாசி மூலிப்பட்டி தவசிலிங்க சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் வரும் 28-ம் தேதி நடக்கிறது. பவானி கூடுதுறைக்குக் கீழே பல்லாயிரம் சிவலிங்கங்கள் இருப்பதாக வரலாறு கூறுகிறது. எனவே, பவானி கூடுதுறையில் புனித நீராடி, எங்கள் குலதெய்வ கோயில் கும்பாபிஷேகத்துக்கு புனித நீர் எடுத்துச் செல்ல வந்துள்ளேன் என்று தெரிவித்தார்.
கரோனா ஊரடங்கு காரணமாக பவானி சங்கமேஸ்வரர் கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. ஆடி அமாவாசை போன்ற விஷேச நாட்களில் கூட பக்தர்கள் கூடுதுறையில் நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பவானி சங்கமேஸ்வரர் கோயிலின் தெற்கு வாசல் வழியாக (பின்வாசல்) கோயிலுக்குள் வந்தார். புனித நீராடி விட்டு, சுவாமி தரிசனம் செய்து தெற்கு வாசல் வழியாகவே அமைச்சர் வெளியே சென்றார்.
முழு ஊரடங்கு நாளில் அமைச்சர் கோயிலில் தரிசனம் செய்தது தொடர்பாக கோயில் உதவி ஆணையர் சபர்மதியிடம் கேட்க முயன்றபோது அவரை தொடர்பு கொள்ளமுடியவில்லை.