கிருஷ்ணகிரியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் பூஜை பொருட்களை இஸ்லாமிய இளைஞர்கள் வழங்கினர்.
விநாயகர் சதுர்த்தி விழாவின் போது தெருக்களில் பெரிய விநாயகர் சிலைகளை அந்தந்த பகுதியினர் வைத்து வழிபடுவது வழக்கம். இந்த ஆண்டு கரோனா பரவலை தடுக்க விநாயகர் சிலை வைக்க தடை விதிக்கப்பட்டது. இருந்த போதிலும், வீடுகளில் விநாயகர் சிலை வைத்து வழிபட எவ்வித தடையும் இல்லை என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கிருஷ்ணகிரி யில் புதுப்பேட்டை பகுதியில் வைக்கும் பெரிய அளவிலான விநாயகர் சிலைக்கு, மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் அஸ்லாம் தலைமையில் பூஜை பொருட்கள் வழங்கி, பூஜை யில் பங்கேற்பது வழக்கம். இந்த ஆண்டு புதுப்பேட்டை பகுதியில் விநாயகர் சிலை வைக்கப் படாததால், நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள விநாயகர் கோயிலுக்கு மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் அஸ்லாம் தலைமையில் இஸ்லாமிய இளைஞர்கள் சென்று பூஜை பொருட்களை வழங்கி, பூஜையில் கலந்து கொண்டனர். இதில், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் கராமத், ரியாஸ், ஜாமீர், அன்சர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.