தமிழகம்

திருமண சீசன் தொடங்கியதால் 5 மாதங்களுக்கு பிறகு மீண்டும் நகைக் கடைகளில் கூட்டம்

செய்திப்பிரிவு

திருமண சீசன் தொடங்கியுள்ளதால், 5 மாதங்களுக்குப் பிறகு நகைக் கடைகளில் மீண்டும் கூட்டம் வரத் தொடங்கியுள்ளது.

கரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமலானதால், மார்ச் மாதம் 2-வது வாரத்தில் நகைக்கடைகள் மூடப்பட்டன. சுமார் 3 மாதங்களுக்குப் பிறகு, ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டு, புதிய வழிமுறைகளைப் பின்பற்றி நகைக் கடைகள் திறக்கப்பட்டன.

கரோனா அச்சம்

ஆனாலும், கரோனா அச்சம் காரணமாக மக்கள் நகைக் கடைகளுக்கு வரவில்லை. பெரியநகைக் கடைகளில் ஆன்லைன் மூலம் நகைகள் வாங்கும் வசதிஅறிமுகம் செய்யப்பட்ட போதிலும், மக்கள் மத்தியில்பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. இதற்கிடையே, தற்போது திருமண சீசன் தொடங்கியதால், மக்கள் படிப்படியாக நகைகளை வாங்க நகைக் கடைகளுக்கு சென்று வருகின்றனர்.

இதுதொடர்பாக சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க பொதுச் செயலாளர் எஸ்.சாந்தகுமார் கூறும்போது, ‘‘நம் நாட்டில் பெரும்பாலான மக்கள் சுபகாரியங்களுக்கு தலைமுறை, தலைமுறையாக, நகைக் கடைகளில் நகைகள் வாங்குவது வழக்கமாக இருக்கிறது.

கரோனா அச்சத்தை போக்க, ஆன்லைனில் நகைகளை விற்பனை செய்யும் வசதி தொடங்கினோம். ஆனால் மற்றபொருட்களைப் போல், நகைகளை ஆன்லைனில் வாங்க மக்கள் விரும்பவில்லை. மக்கள் நகைகளை நேரில் வந்து பார்த்து வாங்குவதில்தான் ஆர்வம் காட்டுவார்கள்.

தற்போது, திருமண சீசன் தொடங்கியுள்ளதால் கடந்த 5 மாதங்களுக்கு பிறகு நகைக் கடைகளுக்கு மீண்டும் கூட்டம் வரத் தொடங்கியுள்ளது. சுமார் 60 சதவீத வாடிக்கையாளர்கள் மீண்டும் நகைக் கடைகளுக்கு வரத் தொடங்கியுள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றனர்.

SCROLL FOR NEXT