வாணியம்பாடியில் முதல்வர் பழனிசாமிக்கு வரவேற்பு அளித்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலருக்கு கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கரோனா தடுப்புப்பணிகள் குறித்தும், வளர்ச்சிப்பணிகள் மற்றும் முடிவுற்றுப்பணிகளை தொடங்கி வைக்க முதல்வர் பழனிசாமி நேற்று முன்தினம் (ஆக.20) வேலூர் மாவட்டத்துக்கு வந்தார். பின்னர், ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் பழனிசாமி அதன் பிறகு தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கார் மூலம் புறப்பட்டார்.
சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக முதல்வர் பழனிசாமி சென்றார். வாணியம்பாடி எல்லையில் உள்ள இஸ்லாமியா கல்லூரி எதிரே தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல் தலைமையில், வாணியம்பாடி சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் கோ.வி.சம்பத்குமார், அதிமுக நகரச்செயலாளர் சதாசிவம் மற்றும் அதிமுக நிர்வாகிகள், வருவாய்த் துறையினர் என பலர் முதல்வரை வரவேற்க காத்திருந்தனர்.
வாணியம்பாடி எல்லைக்குள் முதல்வர் பழனிசாமியின் கார் வந்ததும், அதிமுகவினர் காத்திருப்பதை அறிந்த முதல்வர் பழனிசாமி தனது ஓட்டுநரிடம் காரை நிறுத்துமாறு கூறினார்.
பிறகு, காரை விட்டு கீழே இறங்கிய முதல்வருக்கு அமைச்சர் நிலோபர் கபீல் உட்பட பலர் சால்வை வழங்கி, பூங்கொத்து வழங்கினர். அங்கு கூடியிருந்த அதிமுக கட்சியினர், பொதுமக்கள் என பலர் முதல்வருக்கு கைகொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதிமுகவினர் மற்றும் பொதுமக்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்ட முதல்வர் அதன்பிறகு தருமபுரி நோக்கி புறப்பட்டார்.
இந்நிலையில், முதல்வர் பழனிசாமியின் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வாணியம்பாடி வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஒருவருக்கும் கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, அவர்கள் 2 பேரும் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.