திருச்சி மாநகராட்சிப் பகுதிகளில் நாளை இறைச்சிக் கடைகள் செயல்பட தடை விதித்திருந்த மாநகராட்சி நிர்வாகம், இன்று அந்த அறிவிப்பை திரும்பப் பெறும் வகையில் புதிய அறிவிப்பை வெளியிட்டது.
விநாயகர் சதுர்த்தியையொட்டி ஆக.22-ம் தேதி திருச்சி மாநகராட்சிக்குச் சொந்தமான ஆடு, மாடு, வதைக் கூடங்கள் மற்றும் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து இறைச்சிக் கடைகளும் செயல்படக் கூடாது என்றும், இந்த அறிவிப்பை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆக.18-ம் தேதி மாநகராட்சி ஆணையர் பிறப்பித்த உத்தரவு நேற்று (ஆக.20) வெளியானது. இந்த உத்தரவுக்கு பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்தன.
அதைத்தொடர்ந்து, இன்று (ஆக.21) காலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் ஜவாஹிருல்லா தரப்பைச் சேர்ந்த தமுமுக- மமக சார்பில் மாநகராட்சி அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
அதில், "தமிழ்நாட்டில் எங்கும் இல்லாத வகையில் திருச்சி மாநகராட்சியில் மட்டும் விநாயகர் சதுர்த்தி நாளில் இறைச்சிக் கடைகளை அடைக்குமாறு உத்தரவு வெளியிடப்படுகிறது. கடந்தாண்டு இதேபோல் உத்தரவு வெளியிடப்பட்டு, பின்னர் மக்கள் கோரிக்கையை ஏற்று திரும்பப் பெறப்பட்டது. எனவே, நிகழாண்டு பிறப்பித்துள்ள உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அதைத்தொடர்ந்து, மாநகராட்சி மைய அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக ஹைதர் அலி தரப்பைச் சேர்ந்த தமுமுகவைச் சேர்ந்தவர்கள் இன்று மாலை திரண்டனர். அலுவலகத்தின் பிரதான வாயில் வழியாக உள்ளே நுழைய முயன்றவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி, உள்ளே சென்ற ஓரிருவரையும் வெளியேற்றி வாயில் கதவைத் தாழிட்டனர். இதனால், தமுமுகவினர், இறைச்சிக் கடைகளை மூடும் உத்தரவைத் திரும்பப் பெறக் கோரி வாயில் பகுதியில் தரையில் அமர்ந்து முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் மாநகராட்சி அலுவலர்கள், காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தொடர்ந்து, திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நாளை (ஆக.22) இறைச்சிக் கடைகள் இயங்க தடை ஏதுமில்லை என்று மாநகராட்சி ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.