தமிழகம்

ராஜீவ் கேல்ரத்னா விருது; தடகள வீரர் மாரியப்பனுக்கு சரியான அங்கீகாரம்: அன்புமணி ராமதாஸ் பாராட்டு

செய்திப்பிரிவு

எவ்வளவு நெருக்கடிகள் இருந்தாலும், வறுமை வாட்டினாலும் முயற்சி செய்தால் சாதனை படைக்கலாம் என்பதற்கு மாரியப்பன் தான் சிறந்த உதாரணம். அவருக்கு கேல்ரத்னா விருது வழங்கப்பட்டிருப்பது மிகப்பொருத்தமான அங்கீகாரம் ஆகும் என மாரியப்பனுக்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கை

“பாரா ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் உள்ளிட்ட 5 பேருக்கு விளையாட்டுத் துறையின் மிக உயர்ந்த கவுரவமான ராஜீவ் காந்தி கேல்ரத்னா விருதுகளும், 27 பேருக்கு அர்ஜுனா விருதுகளும், 9 பேருக்கு துரோணாச்சாரியா விருதுகளும், 14 பேருக்கு தயான் சந்த் விருதுகளும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

விளையாட்டுத்துறையின் மிக உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல்ரத்னா விருது இதுவரை இல்லாத வகையில் இந்த ஆண்டு 5 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. மாரியப்பன் தவிர, கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், டேபிள் டென்னிஸ் சாம்பியன் மணிகா பத்ரா, இந்திய மகளிர் ஹாக்கி அணி தலைவர் ராணி ராம்பால் ஆகியோருக்கும் கேல்ரத்னா விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

மிகவும் ஏழைக் குடும்பத்தில் பிறந்து இளம் வயதில் விபத்தில் வலது காலை இழந்த மாரியப்பன், தாயாரின் அரவணைப்பில் வளர்ந்து 2016-ம் ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டிகளில் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கம் பதக்கம் வென்றது போற்றுதலுக்கு உரிய சாதனை ஆகும். அவரது தாயார் சரோஜா கடுமையான நெருக்கடிகளுக்கு இடையில் மகனை வளர்த்து சாதனை படைக்க வைத்திருக்கிறார்.

எவ்வளவு நெருக்கடிகள் இருந்தாலும், வறுமை வாட்டினாலும் முயற்சி செய்தால் சாதனை படைக்கலாம் என்பதற்கு மாரியப்பன் தான் சிறந்த உதாரணம். அவருக்கு கேல்ரத்னா விருது வழங்கப்பட்டிருப்பது மிகப்பொருத்தமான அங்கீகாரம் ஆகும்.

மாரியப்பன் உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு பயிற்சியளித்து வரும் தமிழகத்தைச் சேர்ந்த பயிற்சியாளர் ரஞ்சித்துக்கு சிறந்த பயிற்சியாளருக்கான தயான்சந்த் விருது வழங்கப்பட்டிருக்கிறது. எந்த பயனையும் எதிர்பாராமல் விளையாட்டு சாதனையாளர்களை உருவாக்கும் ரஞ்சித்துக்கு இந்த விருது வழங்கப்பட்டிருப்பதும் பொருத்தமானதாகும்.

விளையாட்டுத்துறையில் சாதனை படைத்ததற்காகவும், சேவை செய்ததற்காகவும் விருது பெறும் சாதனையாளர்கள் மேலும் பல சாதனைகளை படைப்பதற்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவர்களை முன்னுதாரணமாகக் கொண்டு இன்றைய இளம் தலைமுறையினர் விளையாட்டுகளில் சாதனை படைக்க வர வேண்டும் என அழைக்கிறேன்”.

இவ்வாறு அன்புமணி ராமதாஸ் வாழ்த்தியுள்ளார்.

SCROLL FOR NEXT