சிவகங்கை மாவட்டத்தில் கொலை, கொள்ளை வழக்குகளில் குற்றவாளிகளை கண்டுபிடிக்காததால் தமிழக காவல்துறை மீது கார்த்தி சிதம்பரம் எம்பி அதிருப்தி அடைந்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே முடுக்கூரணியில் ஜூலை 14-ம் தேதி ராணுவவீரரின் மனைவி, தாயாரை கொன்றுவிட்டு நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.
அதேபோல் ஜூலை 22-ம் தேதி சிங்கம்புணரி அருகே மருதிப்பட்டி முன்னாள் விமானப்படை வீரர் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்டது.
இச்சம்பவங்கள் குறித்து இரண்டு இடங்களுக்கும் சென்று நான் நேரடியாகவே விசாரித்தேன்.
அதன்பிறகு டிஜிபி திரிபாதியிடம் இருமுறையும், அப்போது சிவகங்கை மாவட்ட பொறுப்பு எஸ்பியாக இருந்தவரிடமும் தொடர்பு கொண்டு குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தினேன். இதுவரை இருசம்பவங்களிலும் குற்றவாளிகளை கைது செய்யவில்லை.
மக்கள் பிரதிநிதியாக இருக்கும் நான் சிவகங்கை மாவட்ட மக்களின் பாதுகாப்புக்காக வைத்த கோரிக்கையை தமிழக அரசும், காவல்துறையும் செவிசாய்க்காமல் செயல்படுவது மாவட்ட மக்களுக்கும், எனக்கும் மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.
மேலும் காவல்துறை மீதான நம்பிக்கை எனக்கும், மக்களுக்கும் குறைந்துவிட்டது, என்று கூறியுள்ளார்.