சட்டம் - ஒழுங்கை பேணிக்காப்பத்தில் இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது என, தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் மாவட்ட வளர்ச்சித் திட்டப்பணிகள் மற்றும் கரோனா நோய் தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று (ஆக.21) நடைபெற்றது.
ஆய்வுக் கூட்டத்திற்குப் பின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"கரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உலகளவில் பரவிய இந்த நோய், தமிழகத்திலும் பரவியுள்ளது. மார்ச் மாதம் இறுதியில் தொடங்கி இதுவரை நோய் பரவலை தடுக்க தமிழக அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கவில்லை. தமிழகத்தில் நேற்று வரை 3 லட்சத்து 61 ஆயிரத்து 435 பேர் தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சட்டம் - ஒழுங்கை பேணிக்காப்பதில் முதன்மை மாநிலம்
தமிழகத்தில் ரவுடிகளை ஒழிக்கும் அரசாக இந்த அரசு செயல்படுகிறது, குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சட்டம் ஒழுங்கை பேணிக்காப்பத்தில் இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது. ஒருசில சம்பவங்களை வைத்து சட்டம் ஒழுங்கை எடை போட்டு பார்க்கக் கூடாது.
"யாரையும் புறக்கணிக்கவில்லை"
கரோனா ஆய்வுக்கூட்டங்களில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி., எம்எல்ஏக்களை புறக்கணிப்பாதாக ஸ்டாலின் குற்றம்சாட்டடியுள்ளார். கரோனா நோய் பரவலை தடுப்பதற்காகத் தான் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. எனவே, இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு வருவோர் யாரையும் தடை செய்வதில்லை. அந்த வகையில் நாமக்கல் எம்.பி. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்படி கூட்டத்தில் கலந்து கொள்வோர் கரோனா பரிசோதனை மேற்கொண்டு வரவேண்டும். யாரையும் புறக்கணிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை.
இரண்டாவது தலைநகரம்
2-வது தலைநகரம் குறித்து அவரவர் கருத்து தெரிவிக்கின்றனர். இது அரசின் கருத்தில்லை. இதுகுறித்து ஏற்கெனவே தெளிவுப்படுத்திவிட்டேன்.
பொதுப் போக்குவரத்து
கரோனா பரவலை தடுக்கும் வகையில் தான் பொதுப்போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது உயிர் சம்மந்தப்பட்ட விஷயம். விலை மதிக்க முடியாத உயிரை காப்பாற்றுவது அரசின் கடமை. அதை அரசு செய்கிறது. கரோனா நோய் தொற்று உள்ளவர்களை கண்டறிய இ-பாஸ் நடைமுறையில் உள்ளது. அரசு முடிந்த அளவுக்குக் கரோனா நோய் பரவலை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. பொதுமக்கள் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
பரமத்தி வேலுாரில் வெற்றிலை ஆராய்ச்சி மையம்
பரமத்தி வேலுாரில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் ஒன்றும் அமைத்துக் கொடுக்க வேண்டும். இங்கு கோழி வளர்ப்பு அதிகம். கோழிகளுக்கு அடிக்கடி நோய் ஏற்படுகிறது. நோய் பரிசோதனை செய்யும் மையம் மத்திய பிரதேசம், போபாலில் உள்ளது. அதுபோன்ற பரிசோதனை மையம் நாமக்கல்லில் ஏற்படுத்தப்படும். தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் 16 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி இருக்கும். இந்தாண்டு 26 லட்சத்து 86 ஆயிரம் ஏக்கராக சாகுபடி பரப்பு அதிகரித்து உள்ளது. தமிழக அரசின் வேளாண் திட்டங்களால் சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளது" என்றார்.
தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி. தங்கமணி, சமூகநலத்துறை அமைச்சர் வெ.சரோஜா, மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ், சட்டப்பேரவை உறுப்பினர்கள் உடனிருந்தனர்.