பிரதிநிதித்துவப் படம் 
தமிழகம்

திருப்பத்தூர் கிளைச்சிறையில் 20 கைதிகளுக்குக் கரோனா தொற்று

ந. சரவணன்

திருப்பத்தூர் கிளைச்சிறையில் சிறைக்காவலர் உட்பட 21 பேருக்குக் கரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருப்பத்தூரில் கடந்த 1956-ம் ஆண்டு கிளைச்சிறை அமைக்கப்பட்டது. இங்கு ஒரே நேரத்தில் 100-க்கும் மேற்பட்ட கைதிகளை அடைக்க முடியும். தற்போது பல்வேறு குற்ற வழக்குகளில் சிக்கிய 40-க்கும் மேற்பட்ட விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சிறைத்துறை அதிகாரியாக சையது அமீர் என்பவர் பொறுப்பு வகித்து வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கஞ்சா வழக்கில் சிக்கிய ஒருவர் திருப்பத்தூர் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறையில் அடைக்கப்பட்ட பிறகு அந்த கைதிக்கு, காய்ச்சல், இருமல் இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, அவரை பரிசோதனை செய்த போது அந்த கைதிக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதேபோல, சென்னையைச் சேர்ந்த 5 பேர் திருப்பத்தூரில் வழிப்பறி வழக்கில் சிக்கி திருப்பத்தூர் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டனர்.

அவர்களுக்கும் காய்ச்சல் ஏற்பட்டதால் மருத்துவ பரிசோதனை செய்த போது 5 பேருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, மற்ற கைதிகளுக்கும் கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் இன்று (ஆக.21) வெளியாகின. அதில், சிறைக்காவலர் உட்பட 21 கைதிகளுக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 21 பேரும் சிறைக்குள்ளேயே தனிமைப்படுத்தப்பட்டனர்.

உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் பலத்த பாதுகாப்புடன் 21 பேரும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். திருப்பத்தூர் நகராட்சி ஊழியர்கள் கிளைச்சிறைக்கு விரைந்து வந்து சிறை வளாகம், சிறைத்துறை அதிகாரி அறைகளுக்கு கிருமி நாசினி தெளித்தனர்.

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் கைதிகள் சிகிச்சை பெற்று வரும் தனி வார்டை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் ஏற்கெனவே 2,299 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 49 பேர் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது சிறையில் உள்ள கைதிகளும் நோய் தொற்று பரவியிருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT