வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் பட்டியல் புதியதாக தயாரிக்கக் கோரி ராமேசுவரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக வயிற்றில் கோடு வரைந்து நூதன மனுக் கொடுக்கும் போராட்டம் நேற்று நடைபெற்றது.
ராமேசுவரம் நகராட்சியில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் பட்டியலில் வறுமை கோட்டிற்கு மேல் உள்ள வசதி படைத்தவர்களின் பெயர்களே அதிகம் இடம்பெற்றுள்ளதைக் கண்டித்தும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் பட்டியல் புதியதாக தயாரிக்கக் கோரியும் ராமேசுவரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக வயிற்றில் கோடு வரைந்து நூதன மனுக் கொடுக்கும் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த மனுக் கொடுக்கும் போரட்டத்திற்கு சிபிஐ தாலுகா செயலாளர் சே.முருகானந்தம் தலைமையில் வகித்தார். மீனவத் தொழிலாளர் சங்க மாநில செயலாளர் சி.ஆர்.செந்தில்வேல், நிர்வாகிகள் ரமணி, ஆரோக்கியநாதன், மோகன்தாஸ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நூதன மனுக் கொடுக்கும் போராட்டம் குறித்து சே.முருகானந்தம் கூறியதாவது,
ராமேசுவரத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் பட்டியல் வசதிப் படைத்தவர்களே அதிகமாக உள்ளனர். உண்மையான ஏழை எளிய மக்கள் அப்பட்டியலில் இல்லை. இதனால் அரசின் சலுகைகளைப் பெற முடியாமல் ஏழை எளிய மக்கள் பரிதவித்து வருகின்றனர். எனவே வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் பட்டியல் புதியதாக தயாரிக்கப்பட வேண்டும்.
பட்டியலில் பெயர் இல்லாதவர்களுக்கு உள்ளாட்சி மன்றங்கள் மூலம் பரிந்துரையை வழங்கப்பட்டு வந்த நிலையில் ராமேசுவரம் நகராட்சியில் தேர்தல் நடத்தாமல் இருப்பதால் ஆணையாளரே பரிந்துரை வேண்டும், என்றார்.