கரோனா தொற்று காரணமாக கடந்த 5 மாதங்களாக மூடப்பட்டுள்ள, சென்னையில் உள்ள குற்றவியல் நீதிமன்றங்களை திறக்க வலியுறுத்தி சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரோனா தொற்று பரவல் காரணமாக இந்தியா முழுவதும் மார்ச் 24 முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அது தொடர்ச்சியாக நீட்டிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் கடந்த மார்ச் மாத இறுதியில் சென்னை உயர் நீதிமன்றம், அதன் மதுரை கிளை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள கீழமை நீதிமன்றங்கள் மூடப்பட்டது.
தமிழகத்தின் பல மாவட்டங்களில் நீதிமன்றங்கள் திறக்கப்பட்ட நிலையில், சென்னையில் உள்ள குற்றவியல் நீதிமன்றங்களை திறக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. நீதிமன்றங்களை திறக்கக்கோரி தமிழக அரசையும், சென்னை உயர் நீதிமன்றத்தையும் வலியுறுத்தி சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதில் கலந்துகொண்ட வழக்கறிஞர்கள் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியுடனும் அமைதியான முறையில் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அப்போது பேசிய வழக்கறிஞர்கள், “கரோனா தொற்று காரணமாக கடந்த 5 மாதங்களாக மூடப்பட்ட நீதிமன்றங்களை திறக்க வேண்டுமென்ற கோரிக்கையை தமிழக அரசும், சென்னை உயர் நீதிமன்றமும் கருத்தில் கொள்ளவில்லை, மதுபானக் கடைகளை திறக்கும் அரசு, சமூக இடைவெளியுடன் நீதிமன்றங்கள் செயல்பட பரிந்துரைக்க வேண்டுமென வலியுறுத்தினர்.