தமிழகம்

இரண்டாவது தலைநகர் திட்டத்தை எம்ஜிஆர் கைவிட்டது ஏன்?- விவரிக்கிறார் அண்ணா நாராயணன்

குள.சண்முகசுந்தரம்

‘இரண்டாவது தலைநகராக ஏன் எங்க ஆலங்குடியை அறிவிக்கக் கூடாது’ என்று மீம்ஸ் போட்டுக் கிண்டலடிக்கும் அளவுக்குப் போய்விட்டது தமிழகத்தின் இரண்டாவது தலைநகர் விவகாரம்.

தமிழகத்தின் இரண்டாவது தலைநகராக மதுரையை அறிவிக்க வேண்டும் என்று கட்சிக் கூட்டத்தில் ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தார் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார். மதுரையின் இன்னொரு அமைச்சரான செல்லூர் கே.ராஜூவும் அடுத்த நாளே இதை வழிமொழிந்தார். இவர்களுக்கு ஆதரவாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் களத்தில் குதிக்க, இவர்களுக்குப் போட்டியாக, “திருச்சியைத் தலைநகராக்க வேண்டும் என்பது எம்ஜிஆர் கண்ட கனவு” என அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஆரம்பித்தார்.

இவர்களுக்கு இடையில், “கோவையை அடுத்த தலைநகராக்க வேண்டும்” என்று கொடியைக் தூக்கினார் கொமதேக தலைவர் ஈஸ்வரன். நேற்று இதற்கெல்லாம் பதில் சொன்ன தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “மதுரையை இரண்டாம் தலைநகராக்க வேண்டும் என்பதும் திருச்சியை இரண்டாவது தலைநகராக்க வேண்டும் என்பதும் அமைச்சர்களின் சொந்தக் கருத்து. இது தொடர்பாக அரசிடம் எந்தக் கருத்தும் இல்லை” என்று பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

இந்த நிலையில், திருச்சியைத் தலைநகராக்க வேண்டும் என்று எம்ஜிஆர் எதற்காக முடிவெடுத்தார், அப்போது நடந்தது என்ன என்பது குறித்து எம்ஜிஆர் உருவாக்கிய அண்ணா பத்திரிகையில் அப்போது செய்தி ஆசிரியராக இருந்த அண்ணா நாராயணன், 'இந்து தமிழ்' இணையத்திடம் பேசினார்.

“அதிமுக ஆட்சி கலைக்கப்பட்டு இரண்டாவது முறையாக எம்ஜிஆர் ஆட்சிக்கு வந்திருந்த நேரம் அது. அப்போது சென்னையில் கடும் தண்ணீர்ப் பஞ்சம். இதனால் அரசுக்குத் தேவையற்ற அவப்பெயர் ஏற்படும் சூழல். அப்போதுதான் கட்சியின் முன்னோடிகள் சிலர் கூடி எம்ஜிஆருக்கு அந்த யோசனையைச் சொன்னார்கள். ‘சென்னையின் மக்கள் தொகைப் பெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதே நிலை தொடர்ந்தால் தண்ணீர்ப் பிரச்சினை உள்ளிட்ட சங்கடங்களைச் சமாளிப்பது சிரமம். எனவே, சென்னை பெருக்கத்தைக் குறைக்க தலைநகரைத் திருச்சிக்கு மாற்றினால் நல்லது. காவிரி ஓடுவதால் எத்தகைய மக்கள் தொகைப் பெருக்கம் வந்தாலும் திருச்சியில் தண்ணீர்ப் பிரச்சினை வராது.

அதுவுமில்லாமல் மாநிலத்தின் மையப் புள்ளியாகவும் திருச்சி இருக்கிறது’ என்பது எம்ஜிஆருக்குச் சொல்லப்பட்ட யோசனை. ‘இதில் சிரமம் இருந்தால் திருச்சியைத் தமிழகத்தின் இரண்டாம் தலைநகராக மாற்றலாம்’ என்ற யோசனையும் அப்போது சொல்லப்பட்டது.

இந்த யோசனை ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்ததால் தலைநகரைத் திருச்சிக்கு மாற்றும் திட்டம் பற்றி வெளிப்படையாகப் பேச ஆரம்பித்தார் எம்ஜிஆர். அவருக்காகத் திருச்சியில் வீடுகூட ஏற்பாடானது. இதற்காக அன்றைய தேதிக்குத் தோராயமாக 1,100 கோடி ரூபாய் செலவாகும் என்றுகூட அப்போது கணிக்கப்பட்டது.

ஆனால், இந்தத் திட்டத்தை கருணாநிதி ஆதரிக்கவில்லை. இதனால் எம்ஜிஆருக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு கூடிவிடுமோ என்ற அச்சம் அவருக்கு. அதனால், ‘தீர்க்கப்படாத மக்கள் பிரச்சினைகள் எத்தனையோ இருக்கையில் திருச்சியில் இன்னொரு தலைநகரை உருவாக்கி டெல்லி தலைநகரை தௌலதாபாத்துக்கு மாற்றிய துக்ளக்கைப் போல் நீங்களும் கோமாளித்தனம் செய்யப் போகிறீர்களா?’ என்று கிண்டலடித்தார் கருணாநிதி. இப்போது எப்படி திருச்சிக்கும் மதுரைக்கும் உரிமைப் போர் நடக்கிறதோ அதுபோல அப்போதும் உரிமை முழக்கம் இருந்தது.

தெற்கில் உள்ள நாடார் சங்கங்களும், ஃபார்வர்டு பிளாக் கட்சியினரும் இரண்டாவது தலைநகரை மதுரையில்தான் அமைக்க வேண்டும் என்று அப்போது கோஷம் எழுப்பினார்கள். டாக்டர் ராமதாஸ், ‘தமிழகத்தைத் தென் தமிழகம், வட தமிழகம் என இரண்டாகப் பிரித்து தென் தமிழகத்துக்கு மதுரையும் வட தமிழகத்துக்கு சென்னையும் தலைநகராக இருக்கலாம்’ என புதிதாக ஒரு திட்டத்தைச் சொன்னார். தெற்கில் வன்னியர் சங்கத்துக்கு அவ்வளவாய் செல்வாக்கு இல்லாத நிலையில் வட தமிழகம், தென் தமிழகம் என பிரித்துவிட்டால் வடக்கில் வலுவான வாக்கு வங்கியை வைத்திருக்கும் தாங்கள் அதிகாரத்தைப் பிடித்துவிடலாம் என்பது அவரது கனவு.

இத்தனை கோரிக்கைகள் இருந்தாலும் இரண்டாம் தலைநகர் திட்டத்துக்கு அப்போது வேறெந்தக் கட்சிகள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் அவ்வளவாய் வரவேற்பு இல்லை. அதனால், தனது முடிவிலிருந்து பின்வாங்கி திட்டத்தையே மூட்டைகட்டி வைத்துவிட்டார் எம்ஜிஆர்.
இந்தப் பிரச்சினை தலைதூக்கிய சமயத்தில்தான் குஜராத் தலைநகராக இருந்த அகமதாபாத் மாற்றப்பட்டு காந்திநகர் புதிய தலைநகராக உருவாக்கப்பட்டது.

அப்போதெல்லாம் ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்திற்குச் செய்தியாளர்கள் பரிமாற்றம் இருக்கும். பிற மாநிலச் செய்தியாளர்கள் நமது மாநிலத்துக்கு வந்து சுற்றிப் பார்த்துச் செய்திகள் வெளியிடுவதும், நமது செய்தியாளர்கள் வெளிமாநிலங்களுக்குச் சென்று வந்து செய்திகள் வெளியிடுவதும் அடிக்கடி நடக்கும். அப்படி அந்த சமயத்தில் நான் உள்பட தமிழகத்தின் 10 செய்தியாளர்கள் குஜராத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டோம். அப்போது காந்திநகர் காட்டுக்குள் இருந்தது. அங்கே புதிய தலைநகர் உருவாகிக் கொண்டிருந்தது.

இந்தப் பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பிய நாங்கள் அமைச்சர்கள் அலுவலகங்களும் அவர்கள் துறை சார்ந்த அலுவலகங்களும் காந்தி நகரில் எப்படி ஒரே வளாகத்தில் கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்பதை எம்ஜிஆரிடம் எடுத்துச் சொன்னோம். திருச்சி தலைநகரம் அதுபோன்ற கட்டமைப்பில் உருவாக்கப்பட வேண்டும் என்பதும் எம்ஜிஆரின் திட்டமாக இருந்தது” என்று சொன்னார் அண்ணா நாராயணன்.

இப்போதுள்ள சூழலில் இரண்டாவது தலைநகர் உருவாக்கம் சாத்தியம் தானா... அப்படியே உருவாக்கப்பட்டால் அதற்கு தகுதியான நகரம் மதுரையா திருச்சியா என நாராயணனைக் கேட்டபோது, “நான் திருச்செந்தூர்காரன். மதுரை தலைநகரானால் எனக்கும் வசதிதான். ஆனால், தண்ணீர்ப் பஞ்சத்தால்தான் இரண்டாவது தலைநகர் உருவாக்கும் பேச்சே எழுந்தது. சென்னையைப் போலவே மதுரையிலும் கோடை காலத்தில் தண்ணீர்ப் பிரச்சினை ஏற்படுகிறது. அப்படி இருக்கையில் மதுரையில் இரண்டாம் தலைநகரை அமைப்பதன் நோக்கம் சரியாக இருக்காது. வற்றாத தண்ணீர் வளம் கொண்ட திருச்சிதான் அதற்குச் சரியான நகரம் என்பது எனது கருத்து.

எனினும் தமிழக அரசு இப்போது இருக்கும் நிதி நெருக்கடியில் புதிதாக ஒரு நகரத்தை உருவாக்குவது என்பதெல்லாம் சாத்தியமில்லை. இன்றைய தேதிக்கு இதற்காக ரூ.20 ஆயிரம் கோடிக்கு மேல் தேவைப்படலாம். இதை எங்கிருந்து திரட்டுவார்கள்? அதுமட்டுமல்ல, தமிழகத்துக்கு இன்னொரு தலைநகரைத் தருவதால் மட்டுமே தங்களுடைய தீராத பிரச்சினைகள் எல்லாம் தீர்ந்துவிடும் என்ற நம்பிக்கை மக்களிடம் இல்லை. அதனால் அவர்களும் இந்த விவகாரத்தில் பெரிதாக ஆர்வம் காட்டுவதாகத் தெரிவில்லை.

ஆகவே, அமைச்சர்களும் அரசியல் கட்சிகளும் தங்கள் விருப்பத்தை வேண்டுமானால் வெளிப்படுத்திக் கொண்டிருக்கலாமே தவிர இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இப்போதைக்கு இருப்பதாகத் தெரியவில்லை” என்றார் நாராயணன்.

SCROLL FOR NEXT