தமிழகம்

மதுரையை இரண்டாவது தலைநகரமாக்க திண்டுக்கல் வர்த்தகர் சங்கம் வரவேற்பு 

பி.டி.ரவிச்சந்திரன்

மதுரையை இரண்டாவது தலைநகரமாக்க திண்டுக்கல் வர்த்தகர் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

திண்டுக்கல் வர்த்தகர் சங்கம் சார்பில் முதுநிலை தலைவர் எஸ்.கே.குப்புச்சாமி, தலைவர் ஜி.சுந்தரராஜன், பொதுச்செயலாளர் மேடாபாலன் ஆகியோர் தமிழக முதல்வர், துணை முதல்வர் ஆகியோருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:

மதுரையைச் சுற்றி 200 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள பொதுமக்கள் மற்றும் தொழில்துறையை சேர்ந்தவர்கள் எந்த ஒரு அரசுத்துறையை அணுகவேண்டும் என்றாலும் சென்னைக்கு தான் செல்லவேண்டியதுள்ளது.

மதுரையில் இருந்து கன்னியாகுமரி வரை பல மாவட்டங்களை இணைக்கும் நான்குவழிச்சாலையால் போக்குவரத்துவசதி, மதுரை விமானநிலையம், தூத்துக்குடி துறைமுகம் என அனைத்து போக்குவரத்து வசதிகளும் உள்ளன.

மதுரையை இரண்டாவது தலைநகராக அறிவித்தால் திண்டுக்கல், தேனி, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட கன்னியாகுமரி வரை தென்மாவட்டங்களில் வளர்ச்சிபணிகள் துரிதமாக நடைபெறும்.

மதுரையின் தென்பகுதியில் ஆயிரக்கணக்கான நிலங்கள் காலியாக உள்ளது. இந்த இடத்தில் அரசின் பல்வேறு துறைகளுக்கான கட்டமைப்பு வசதிகளை அமைக்கலாம். மதுரையை இரண்டாம் தலைநகராக அறிவித்தால் ஆண்டுக்கு இரண்டுமுறை சட்டசபை கூட்டம் நடத்த வாய்ப்பாக அமையும்.

மதுரையை இரண்டாம் தலைநகராக அறிவித்தால் சென்னையில் கூட்டநெரிசல் குறைய வாய்ப்புள்ளது.

ஏற்கெனவே உயர்நீதிமன்ற கிளை மதுரையில் உள்ளது தென் மாவட்ட மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

மிகவும் பழமை வாய்ந்த நகரமான மதுரைக்கு பெருமைசேர்க்கும் விதமாக மதுரையை இரண்டாம் தலைநகரமாக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம், என தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT