சாத்தான்குளம் தந்தை - மகன் உயிரிழந்த விவகாரத்தில் சிறையிலிருக்கும் காவலர்கள் தாமஸ் பிரான்சிஸ், முத்துராஜ் ஜாமீன் கோரிய வழக்கில் சிபிஐ பதில்மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இருவருக்கும் ஜாமீன் வழங்க சிபிஐ தரப்பில் கடும் எதிர்ப்பு
நெல்லை மாவட்டத்தை சேர்ந்த தாமஸ் பிரான்சிஸ், முத்துராஜ் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினை தாக்கல் செய்துள்ளனர்.
அதில்," சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ், மகன் பெனிக்ஸ் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக ஜூலை 1ஆம் தேதி கைது செய்யப்பட்டு தற்போது வரை சிறையில் இருக்கிறோம்.
உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவின்படி சிபிசிஐடி காவல்துறையினர் வழக்கை விசாரித்த நிலையில் தற்போது சிபிஐ காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
வழக்கு தொடர்பான ஆவணங்களை ஏற்கனவே தடய அறிவியல் துறை அதிகாரிகள் சேகரித்துவிட்ட நிலையில் விசாரணையும் முடிவடைந்து உள்ளது. எங்களுக்கு ஜாமீன் வழங்கும் பட்சத்தில் தலைமறைவாக மாட்டோம் என்றும், நீதிமன்றம் வகுக்கும் கட்டுப்பாடுகளுக்குக் கட்டுப்படுவோம் என்றும் உறுதி கூறுகிறோம். ஆகவே, இந்த வழக்கில் ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்" எனக் கூறியுள்ளனர்.
இந்த மனு நீதிபதி பாரதிதாசன் முன்பாக விசாரணைக்கு வந்தது அப்போது இருவருக்கும் ஜாமீன் வழங்க சிபிஐ தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி இந்த வழக்கு குறித்து சிபிஐ தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 26-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.