கொடைக்கானல் வருவாய் கோட்டத்திற்கு உதவி ஆட்சியராக ஐ.ஏ.எஸ்., அதிகாரி சிவகுருபிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி மாவட்ட உதவி ஆட்சியர் பயிற்சியில் இருந்தவர் எம்.சிவகுருபிரபாகரன். இவருக்கு தற்போது பணியிடம் வழங்கப்பட்டுள்ளது. கொடைக்கானல் வருவாய் கோட்டத்தின் உதவி ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த பல ஆண்டுகளாக கொடைக்கானல் வருவாய் கோட்டத்திற்கு பதவி உயர்வு பெற்று வருபவர்கள் கோட்டாட்சியர்களாக நியமிக்கப்பட்டுவந்தனர்.
இந்நிலையில் 35 ஆண்டுகளுக்கு முன்பு குர்னிகால் சிங் பிர்சாதா என்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி கொடைக்கானல் உதவி ஆட்சியராக பணிபுரிந்தார். இதற்கு பிறகு தற்போது நேரடி ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக சிவகுருபிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் இந்த இளம் ஐ.ஏ.எஸ்., அதிகாரி அதிக ஆர்வம்காட்டுவார் என்ற எதிர்பார்ப்பில் கொடைக்கானல் மக்கள் உள்ளனர்.
உதவி ஆட்சியர் எம்.சிவகுருபிரபாகரன் தனது ட்விட்டர் பதிவில், கொடைக்கானலில் ஒன்றாக வேலைசெய்வோம். புதுமையான யோசனைகளை அனுப்புங்கள், விவாதித்து செயல்படுவோம் என தெரிவித்துள்ளார்.
பேராவூரணி அருகே ஒட்டங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகுருபிரபாகரன். இவரது திருமண ஏற்பாட்டின்போது தனது மனைவி ஒரு டாக்டராகத்தான் இருக்க வேண்டும். அதுவும் எனது கிராமத்தில் அவர் மருத்துவசேவை செய்யவேண்டும். இதுதான் நான்கேட்கும் வரதட்சணை என கூறியிருந்தார். இதற்கு ஒப்புக்கொண்ட சென்னையைச் சேர்ந்த டாக்டர் கிருஷ்ண பாரதி என்பவரை திருமணம் செய்தவர் சிவகுருபிரபாகரன் என்பது குறிப்பிடத்தக்கது.