தென்காசி மாவட்டத்தில் தென் மேற்கு பருவமழை இந்த ஆண்டு குறிப்பிட்ட காலத்தில் தொடங்கினாலும் ஜூன், ஜூலை மாதங்களில் போதிய அளவுக்கு பெய்யவில்லை. இதனால், அணை கள், குளங்கள் நீர் வரத்தைப் பெறவில்லை. இந்நிலையில், ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
தொடர் மழையால் அணைகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. கடனாநதி அணை, ராமநதி அணை, குண்டாறு அணை, அடவிநயினார் கோவில் அணை ஆகியவை முழு கொள்ளளவை எட்டின. கருப்பாநதி அணை நிரம்பும் நிலைக்கு வந்தது. கடந்த 10 நாட்களாக மழையின்றி வறண்ட வானிலை நிலவுகிறது.
இந்நிலையில், கருப்பாநதி அணை, ராமநதி அணை, கடனாநதி அணை, அடவிநயினார் கோவில் அணை ஆகியவற்றில் இருந்து இன்று (21-ம் தேதி) முதல் பாசனத்துக்கு தண்ணீர் திறக்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அடவிநயினார் கோவில் அணை மூலம் நேரடியாக 2,417 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்தப் பகுதிகளில் கார் நெல் சாகுபடி நடவுப் பணிகள் ஜூன் மாதத்தின் பிற்பகுதியில் நடைபெறும். இந்த ஆண்டில் ஜூன் மாதத்தில் அணையில் போதிய நீர் இல்லாததால் கார் சாகுபடிக்கு தண்ணீர் திறக்கவில்லை. தண்ணீரை எதிர்பார்த்து நெல் விதைத்த விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர். தண்ணீரின்றி நெல் நாற்றுகளும் கருகின.
கார் சாகுபடி அறுவடைப் பணி முடிந்ததும் அக்டோபர் மாதத்தில் தான் பிசான சாகுபடியை விவசாயி கள் தொடங்குவர்.
ஆனால், தற்போது கார் சாகுபடியும் இல்லாமல், பிசான சாகுபடியும் இல்லாமல் இரண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் தண்ணீர் திறக்கப் படுவதால் சாகுபடி பணியை தொடங்குவதா?, அல்லது பொறுத்திருந்து பருவம் வந்ததும் பணிகளை தொடங்கலாமா? என்று முடிவு எடுக்க முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, “அடவிநயினார் அணை பாசனத்தில் கார் சாகுபடிக்காக விதைக்கப்பட்ட நெல் நாற்றுகள் கருகி விட்டன. கசிவு நீரைக் கொண்டு சுமார் 50 ஏக்கரில் மட்டுமே ஒரு சில விவசாயிகள் கார் சாகுபடி செய்துள்ளனர். மற்ற நிலங்கள் அனைத்தும் சாகுபடி நடைபெறாமல் கிடக்கின்றன. இப்போது திறக்கப்படும் தண்ணீரைக் கொண்டு நெல் விதைப்புப் பணியைத் தொடங்கினால், நெற்பயிற்கள் கதிர் வரும் பருவத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடையும்.
அந்தச் சமயத்தில் தொடர் மழை பெய்தால் நெல் பயிர்கள் நோய் தாக்குதலுக்கு உள்ளாகும். மேலும், அறுவடைப் பணியையும் மழைக் காலத்தில் செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.
மழைக் காலத்தில் நெல்மணிகள் விளைந்து மழையில் சேதமடையும் வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே, சாகுபடி பணியை உடனடியாக தொடங்குவதா? அல்லது உரிய பருவம் வரும் போது தொடங்குவதா? என்று முடிவெடுக்க முடியாமல் திணறு கிறோம்.
ஒருவேளை வடகிழக்கு பருவமழை ஏமாற்றம் அளித் தால் இப்போதே சாகுபடியை தொடங்கினால் பயனளிக்கக்கூடும். வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்தால் பயிர்ச் சேதம் அதிகரிக்கும். என்ன செய்வது என்று தெரியாமல் இருதலைக் கொள்ளி எறும்பாகத் தவிக்கிறோம்” என்றனர்.