அதிமுகவில் ஒற்றுமை இல்லை,எங்கள் கூட்டணியல் குழப்பமில்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.
திருப்பூர் மாவட்டம் காங்கயம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம், காங்கயம் அருகேயுள்ள சிக்காம்பாளையத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற அவர்,செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வரும் நவ.20-ம் தேதி காங்கயம் தொகுதியில் அரசியல் மாநாடு நடத்தத் திட்டமிட்டுள்ளோம். மதச்சார்பற்ற கூட்டணி சார்பில் நடத்தப்படும் அந்த மாநாடு, அதிமுக அரசை வீட்டுக்கு அனுப்பும் மாநாடாக அமையும்.
காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் அனைவரும், ராகுல்காந்தியைத் தவிர வேறு யாரையும், கட்சித்தலைவராக ஏற்றுக் கொள்ளத்தயாராக இல்லை. ராகுல்காந்திதான் எங்களது நிரந்தர தலைவர்.
தமிழகத்தில் ஆளும் கட்சியின்முதல்வர் பதவியில் இருக்கும்போதே, அவரது இடத்தைப் பிடிக்க முயற்சி நடைபெறுவது மோசமான செயல். அதிமுகவில் ஒற்றுமை இல்லை என்பது இதன்மூலம் தெளிவாகிறது.
அதேசமயம், எங்கள் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் ஸ்டாலின்தான். எங்கள் கூட்டணிக்குள் குழப்பம் இல்லை.தென் தமிழகம் வளர வேண்டுமெனில், மதுரையை இரண்டாவது தலைநகரமாக அறிவிக்க வேண்டும். மாநிலத்தின் வளர்ச்சிக்காக திருச்சியை மூன்றாவது தலைநகராக அறிவிக்கலாம்.இவ்வாறு கே.எஸ்.அழகிரி கூறினார்.
முன்னதாக, கே.எஸ்.அழகிரிநேற்று வெளியிட்ட அறிக்கையில், “கரோனா காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் வேலையிழப்பு மற்றும் வறுமை ஏற்பட்டுள்ளது. எனவே, ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.5 ஆயிரம் கொடுத்தால் மட்டுமே, வறுமையில் வாடும் மக்கள் ஓரளவுக்கு வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க முடியும்” என்று கூறியுள்ளார்.