மத்தியில் புதிதாக பொறுப்புள்ள பாஜக அரசு, சென்னை துறைமுக இணைப்புச் சாலை திட்டத்தை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வடசென்னை பகுதியில் நிலவும் கண்டெய்னர் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணவும், சென்னை-எண்ணூர் துறைமுகங் களின் கட்டமைப்புவசதிகளை மேம்படுத்துவதற்காகவும், ரூ.600 கோடி மதிப்பீட்டில் துறைமுக இணைப்புச் சாலை திட்டப் பணிகள் கடந்த 2012ம் ஆண்டு தொடங்கப்பட்டன.
இதன்படி, மாதவரம் உள்வட்ட சாலை, எண்ணெய் சுத்திகரிப்பு சாலை, பொன்னேரி நெடுஞ்சாலை, எண்ணூர் விரைவு சாலை உள்ளிட்ட 30 கி.மீட்டர் நீளத்திற்கான சாலை களை அமைக்கும் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளன. இருப்பினும், சில பிரச்சினைகள் காரணமாக இத்திட்டப் பணிகள் முழுமையடையாமல் உள்ளன.
இந்நிலையில், புதிதாக பதவியேற்றுள்ள பாஜக அரசு இத்திட்டத்தை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து, எண்ணூர் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கண்ணன் கூறியதாவது:
எண்ணூர் விரைவு சாலையில் பவானியம்மன் கோயில் உ்ளளது. இந்த இடத்தில்தான் 1.6 கி.மீ., தூர சாலையும், எண்ணூர் விரைவு சாலையும் சந்திக்கிறது. இதனால், கோயிலை மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. கோயில் இருந்த இடத்துக்கு அருகிலேயே புதிதாக கோயிலை கட்டித்தர துறைமுக நிர்வாகம் உறுதியளித்தது. ஆனால், இந்த உறுதி மொழி காப்பாற்றப் படவில்லை. இதனால், இப்பகுதியில் சாலைகள் அமைக்கும் பணிகள் பாதிப்படைந்துள்ளன.
நல்ல தண்ணீர் ஓடைக்குப்பம் பகுதியில், கடலோரத்தில் வசித்த மக்களுக்கு எர்ணாவூரில் அடுக்கு மாடி வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால், சாலை அமைக்கும் பணி போக மீதம் உள்ள இடத்தில் தாங்கள் தொடர்ந்து வசிக்க அனுமதிக்கா விட்டால் இத்திட்டத்திற்கு ஒத்து ழைப்பு தர இயலாது என்று கூறி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட் டனர். இதனால், இப்பகுதியிலும் சாலை அமைக்கும் பணி தடைப்பட்டுள்ளது.
இத்திட்டம் துவங்கி இரண்டாண்டு களுக்கு மேலாகியும் இது வரை முடியாமல் உள்ளது. மேலே குறிப்பிட்ட சிற்சில தடைகள் காரணமாக, இப்பணிகள் முடங்கியுள்ளன. தற்போது, மத்தியில் பொறுப் பேற்றுள்ள புதிய அரசு இத்திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும்.
இவ்வாறு கண்ணன் கூறினார்.