கரோனா பாதிப்புக்கு உயர் சிகிச்சை வழங்க வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் பணியாளர்களுக்கும் கரோனா நோய் தொற்று குறித்த முழு பரிசோதனை செய்ய வேண்டும். கரோனா நோய் தொற்று தாக்குதலால் பாதிக்கப்படும் பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் மருத்துவ செலவுகளை டாஸ்மாக் நிர்வாகம் முழுமையாக ஏற்க வேண்டும்.
அவர்களுக்கு உயர் சிகிச்சை வழங்க வேண்டும். கரோனா தொற்று தடுப்பு பணிகளில் முன் களப்பணியாளர்களுக்காக அறிவிக்கப்பட்ட காப்பீடு திட்டத்தில் டாஸ்மாக் பணியாளர்களை இணைக்க வேண்டும். கரோனா தாக்குதலால் உயிரிழந்த மதுரையை சேர்ந்த ஜி.வேல்முருகன், எம்.ராஜசேகர், விற்பனையாளர் சங்க நிர்வாகி ராஜா உள்ளிட்ட பணியாளர்களின் குடும்பங்களுக்கு, ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். உயிரிழந்த பணியாளர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் அரசின் நிரந்தர பணி வழங்க வேண்டும். டாஸ்மாக் மதுபான கடைகள் இயங்கும் நேரத்தை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை என மாற்றியமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டி பசுவந்தனை சாலையில் டாஸ்மாக் பணியாளர்கள் அனைத்து சங்க கூட்டமைப்பு சார்பில் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்க மாவட்ட பிரச்சார செயலாளர் ஜி.மாடசாமி, மாவட்ட தலைவர் எஸ்.மாரிமுத்து ஆகியோர் தலைமை வகித்தனர். ஏஐடியுசி மாநில துணை தலைவர் நெல்லை நெப்போலியன், டாஸ்மாக் பணியாளர்கள் சங்க மாவட்ட தலைவர் புங்கலிங்கம், எல்.பி.எப். மாநில துணை தலைவர் சந்தானம் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், டாஸ்மாக் பணியாளர்கள் சங்க பணியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் முழங்கினர்.
டாஸ்மாக் பணியாளர்களின் பணி பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு அலட்சியம் செய்வது தொடருமானால், வரும் 25ம் தேதி முதல் தினமும் 2 மணி நேரம் வேலை நிறுத்தம் செய்யப்படும். மதுவில்லா தமிழகம் மலர வேண்டும் என்பதை ஆதரிக்கும் டாஸ்மாக் பணியாளர்களாகிய எங்களுக்கு அரசின் பிற துறைகளில் உள்ள காலி பணியிடங்களில் நிரந்தர மாற்று பணி நியமனம் வழங்க வேண்டும் என தொடர் முழக்க ஆர்ப்பாட்டத்தின் போது டாஸ்மாக் பணியாளர்கள் தெரிவித்தனர்.