கிரண்பேடி: கோப்புப்படம் 
தமிழகம்

புதுச்சேரியில் கரோனா தடுப்புப் பணிகளை மேற்பார்வை செய்ய மத்திய அரசு குழு நியமிக்க வேண்டும்; பிரதமரை வலியுறுத்தியுள்ள கிரண்பேடி

செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரியில் கரோனா பணிகளை மேற்பார்வை செய்ய மத்திய அரசு உடனடியாக குழு நியமிக்க வேண்டும் என்று பிரமதர் மற்றும் உள்துறை அமைச்சருக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி வலியுறுத்தியுள்ளார்.

புதுச்சேரியில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அரசு மருத்துவக் கல்லூரி, ஜிப்மரில் படுக்கை வசதி இல்லாமல் ஆயிரக்கணக்கானோர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதைத்தொடர்ந்து, புதுச்சேரியில் தனியார் மருத்துவக் கல்லூரிகள் 7 இருந்தும் அதை பேரிடர் மேலாண்மை சட்டப்படி புதுச்சேரி அரசு கையகப்படுத்தவில்லை உள்பட பல புகார்களை நேற்று (ஆக.19) மத்திய அரசுக்கு கிரண்பேடி தெரிவித்திருந்தார். இதையடுத்து, முதல்கட்டமாக ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியை அரசு கையகப்படுத்தியது.

இச்சூழலில் இன்று (ஆக.20) துணைநிலை ஆளுநர் கிரண்பேடி வாட்ஸ் அப்பில் தெரிவித்த தகவல்கள்:

"புதுச்சேரியில் கரோனா மேலாண்மை பணிகளை மேற்பார்வை செய்ய நிபுணத்துவம் பெற்ற குழுவை மத்திய அரசு நியமிக்க பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கோரியுள்ளேன். புதுச்சேரியில் உள்ள மருத்துவ வளங்கள் முழுமையாக பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதை மதிப்பாய்வு செய்ய இக்குழுவை அவசரமாக நியமிக்க கேட்டுள்ளேன். ஏனெனில் மக்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள்.

முன்னதாக முதல்வர் நாராயணசாமிக்கு கடிதம் எழுதியிருந்தேன். அதில், முதல்வருக்கு உதவவும், ஆலோசனை செய்யவும் மருத்துவ ஆலோசனைக்குழு தேவை என பரிந்துரைத்தேன்.

பிரதமர் மருத்துவ காப்பீடு மற்றும் நமது மாநில திட்டங்கள் மற்றும் சொந்த நிதியை பயன்படுத்தவும், 'பி.எம்.கேர்ஸ்' நிதியிடம் இருந்து தேவையான நிதி பெறவும் நடவடிக்கை எடுக்கலாம் என்று குறிப்பிட்டிருந்தேன்.

அத்துடன் மூத்த அரசு செயலாளர் அன்பரசுவை நிவாரண மற்றும் மறுவாழ்வு ஆணையராக நியமித்து கரோனா பணிகளை ஒருங்கிணைக்கவும் ஆலோசனை தெரிவித்திருந்தேன். அனுபவமிக்க அவரின் மேற்பார்வை தேவை என்றுள்ளேன். நெருக்கடியான இக்காலத்தில் இவ்விஷயங்களை நிலுவையில் முதல்வர் நாராயணசாமி வைத்து விட்டார். இதை அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் தெரிந்துகொள்வது அவசியம்.

கரோனா காலத்தில் அனைத்து அவசர விஷயங்களையும் முதல்வர் மறுபரிசீலனையே செய்யவில்லை. மக்கள் ஏன் கஷ்டப்படுகிறார்கள் என்பதை தெரிவிக்கவும் முக்கிய விஷயங்கள் செயல்படுத்தாததை பற்றியும் இந்திய அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளேன்"

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT