மதுரையில் பஞ்சலோக சிலைகள் திருடு போன 300 ஆண்டுகள் பழமையான பேச்சியம்மன் கோயில். படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி 
தமிழகம்

அம்மன் கோயிலில் பஞ்சலோக சிலைகள் திருட்டு: கரோனா ஊரடங்கை பயன்படுத்தி மதுரையில் மர்ம நபர்கள் துணிகரம்

செய்திப்பிரிவு

மதுரையில் கரோனா ஊரடங்கை பயன்படுத்தி பிரசித்திபெற்ற அம்மன் கோயிலில் மர்ம நபர்கள் பஞ்சலோக சிலைகளை திருடிச் சென்றுள்ளனர்.

மதுரை திலகர்திடலில் பேச்சி யம்மன் படித்துறை பகுதியில் சுமார் 300 ஆண்டுகள் பழமையான பேச்சியம்மன் கோயில் உள்ளது. கரோனா ஊரடங்கால் இக்கோயில் மூடப்பட்டு இருந்தது. ரூ.10 ஆயிரத்துக்கு கீழ் வருமானமுள்ள கோயில்களை திறக்கலாம் என்ற அரசின் உத்தரவால் இக்கோயிலை கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதி திறந்து சுத்தம் செய்தனர். அப்போது கோயில் வளாகத்துக்குள் இருந்த மரப்பெட்டிக்குள் வைக்கப்பட்டி ருந்த தங்க முலாம் பூசிய சிலைகள் உள்ளிட்ட பொருட்களை கோயில் நிர்வாகிகள் ஆய்வு செய்தனர்.

இதில் பஞ்சலோகம் பூசப்பட்ட குதிரை மேல் அய்யனார், யானை மேல் பொன்னர் சங்கர், விநாயகர் ஆகிய 3 சிலைகள் திருடு போயிருந்தது தெரியவந்தது. இது குறித்து பேச்சிமுத்து என்பவர் திலகர்திடல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்துகின்றனர். இதற்கிடையில் அப்பகுதியிலுள்ள சிசிடிவி கேமராக்களை போலீஸார் ஆய்வு செய்தனர்.

இதில் கோயிலின் பின்பகுதியில் உள்ள விநாயகர் கோயில் வழியாக இரும்புக் கேட்டை உடைத்து உள்ளே புகுந்த லுங்கி கட்டியிருந்த 25 வயது மதிக்கத்தக்க ஒருவர் மரப்பெட்டியில் இருந்து 3 சிலைகளையும் திருடி சாக்குப்பையில் வைத்துக் கொண்டு தப்பிச் செல்வது தெரியவந்தது. அந்த நபர் அதிகமாக இடது கையை பயன்படுத்துவதால் அவர் இடது கை பழக்கம் உள்ளவராக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதனால் பழைய குற்றவாளிகளின் பட்டியலை சேகரித்து அந்த நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

300 ஆண்டுகளுக்கு முன்பு பேச்சியம்மன் படித்துறையில் அக்கோயில் உருவாகியபோது செய்யப்பட்ட அந்த பழமையான பஞ்சலோகச் சிலைகளின் மதிப்பு ஒரு லட்சம் ரூபாயாக இருக்கலாம் என போலீஸார் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT