தமிழகம்

கும்மிடிப்பூண்டி அருகே பழைய நிலையத்தை அகற்றிவிட்டு புதிதாக ரூ.12 கோடியில் `அம்மா குடிநீர்’ உற்பத்தி நிலையம்: தினமும் 2 லட்சம் லிட்டர் குடிநீர் பெறலாம்

கி.ஜெயப்பிரகாஷ்

கும்மிடிப்பூண்டி அருகே தற்போதுள்ள அம்மா குடிநீர் உற்பத்தி நிலையத்தை அகற்றிவிட்டு, அதே இடத்தில் ரூ.12 கோடி மதிப்பீட்டில் புதிய நிலையம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கவுள்ளது. இதன்மூலம் தினமும் 2 லட்சம் லிட்டர் வரை குடிநீர் பெற முடியும்.

பொதுமக்களுக்கு குறைந்த விலையில் பாதுகாப்பான குடிநீர் வழங்க வேண்டும் என்ற நோக்கில் தமிழக அரசு இந்தியாவிலேயே முதல் முறையாக ‘அம்மா குடிநீர்' என்ற பெயரில் பாட்டில்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை அடைத்து பேருந்து நிலையங்கள், அரசுப் பேருந்துகளில் ஒரு லிட்டர்ரூ.10-க்கு விற்பனை செய்து வருகிறது. இந்த திட்டத்தை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2013-ம் ஆண்டு தொடங்கிவைத்தார்.

இந்தக் குடிநீரை தயாரிப்பதற்காக திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சாலை போக்குவரத்துக் கழக நிறுவன வளாகத்தில் 2.47 ஏக்கர் பரப்பில், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் குடிநீர் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டது.

ஒரு லிட்டர் குடிநீர் பாட்டில் ரூ.10-க்கு விற்கப்படுவதால் இத்திட்டம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஆரம்பத்தில் தினமும் சுமார் ஒரு லட்சம் லிட்டருக்கும் மேல் குடிநீர் உற்பத்தி செய்யப்பட்டது. இதற்கிடையே, இங்குள்ள இயந்திரங்கள் பழுதாகியுள்ளதால், படிப்படியாக உற்பத்தி குறைந்து தற்போது ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 30 ஆயிரம் லிட்டர் மட்டுமே உற்பத்தி செய்ய முடிகிறது.

இந்நிலையில், இந்த நிலையத்தை அகற்றிவிட்டு, இதே இடத்தில் புதிதாக உற்பத்தி நிலையத்தை அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

அதிகாரிகள் தகவல்

இது தொடர்பாக தமிழக அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறும்போது, ‘‘கரோனா ஊரடங்கால் பேருந்துகள் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், அம்மா குடிநீர் உற்பத்தி நிலையத்திலும் பெரிய அளவில் குடிநீர் உற்பத்தி செய்வதில்லை.

மேலும், அங்குள்ள உற்பத்தி நிலையத்தில் இருக்கும் கருவிகள், இயந்திரங்கள் பழுதடைந்து விட்டதால், முழு அளவில் குடிநீர் உற்பத்தி செய்ய முடியவில்லை. எனவே, தற்போதுள்ள பழைய நிலையத்தை அகற்றிவிட்டு அதே இடத்தில் ரூ.12 கோடியில் புதிய உற்பத்தி நிலையத்தை விரைவில் அமைக்கவுள்ளோம். இந்த பணிகள் நிறைவடையும்போது, ஒரு நாளைக்கு சுமார் 2 லட்சம் லிட்டர் குடிநீர் பெற முடியும்’’ என்றனர்.

SCROLL FOR NEXT