தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் இரட்டைக் கொலையில் தொடர்புடைய ரவுடி துரைமுத்து (30) என்பவரை போலீஸார் தேடினர்.
வல்லநாடு அருகே மணக்கரை பகுதியில் மறைந்து இருந்த ரவுடியை பிடிக்கச் சென்ற தனிப்படை போலீஸார் மீது துரைமுத்து தன்னிடமிருந்த நாட்டு வெடிகுண்டுகளை வீசினார்.
காவலர் சுப்ரமணியன் சம்பவ இடத்தில் மரணம் அடைந்தார். மேலும், குண்டுகள் வெடித்ததில் துரைமுத்துவும் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக நேரில் ஆய்வு செய்ய தமிழக டிஜிபி திரிபாதி நேற்றிரவு மதுரை வந்தார்.
மாநகராட்சி அலுவலகம் எதிரிலுள்ள காவல்துறை உயரதிகாரிகளுக்கான தங்கும் விடுதியில் ஓய்வெடுத்தார்.
தூத்துக்குடிக்கு புறப்பட்டுச் செல்வதற்கு முன்னதாக மதுரை நகர் காவல் ஆணையர் பிரேமானந்த் சின்கா, தென்மண்டல ஐஜி முருகன், மதுரை சரக டிஐஜி ராஜேந்திரன், காவல் துணை ஆணையர்கள் சிவபிரசாத், பழனிக்குமார், சுகுமாறன், மதுரை எஸ்பி சுஜித்குமார் உள்ளிட்ட அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
சட்டம், ஒழுங்கு மற்றும் குற்றத்தடுப்பு, நிலுவை வழக்குகள் குறித்த விவரங்களை கேட்டறிந்தார்.
பொதுமக்களின் பிரச்னைகளுக்கு துரிதமாக தீர்வு காண்பது, மக்களை மென்மையாக அணுகுவது போன்ற பல்வேறு அறிவுரைகளை அதிகாரிகளுக்கு அவர் கூறியதாக தெரிகிறது.
சுமார் 30 நிமிடத்திற்கு மேலாக நடந்த இந்த ஆலோசனைக்கு பிறகு டிஜிபி தூத்துக்குடிக்கு புறப்பட்டுச் சென்றதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.