பேரிடர் மேலாண்மை சட்டப்படி புதுச்சேரியில் தனியார் மருத்துவக் கல்லூரிகளை அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வரவில்லை. போதிய மருத்துவ வசதி இருந்தும் மக்கள் கஷ்டப்படுகிறார்கள், இதில் பிரதமர், உள்துறை அமைச்சர் தலையீடு தேவை என்று மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளதாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி விட்டன. புதுச்சேரியில் இதுவரை 8,762 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 5,312 பேர் வீடு திரும்பியுள்ளனர். தற்போது மருத்துவமனைகளில் 1,621 பேர் சிகிச்சையில் உள்ளனர். அதை விட கூடுதலாக 1,700 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோரால் கரோனா தொற்று அதிகளவில் பரவுவதாக குற்றச்சாட்டு உள்ளது. இதுவரை 129 பேர் இறந்துள்ளனர்.
தற்போது கரோனா சிகிச்சை முழுமையாக ஜிப்மர், இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தரப்படுகிறது. தனியார் மருத்துவக் கல்லூரிகள் 7 இருந்தாலும் இரண்டை தவிர மீதமுள்ளவை படுக்கைகளை தரமறுத்துள்ளன. இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அரசு தரப்பில் தெரிவித்தும் பலனில்லை.
இச்சூழலில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி இன்று (ஆக.19) வாட்ஸ் அப்பில் வெளியிட்ட தகவல் விவரம்:
"கரோனாவால் புதுச்சேரியில் மருத்துவமனைகள் நிரம்பி வருகின்றன. உண்மையில் படுக்கைகள் போதிய அளவில் இல்லை. புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 7-ல் இரண்டை தவிர மீதமுள்ளவை படுக்கைகளை தர முன்வரவில்லை. நோயாளிகளுக்குத் தற்போது படுக்கை வசதி தேவைப்படுகிறது. தற்போது மருத்துவமனையில் இடம் கிடைக்காமல் மக்கள் படும் துன்பம் குறைக்கக்கூடிய ஒன்றுதான்.
பேரிடர் மேலாண்மை சட்டப்படி ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியை அரசு எடுத்துக்கொண்டால் இதர தனியார் மருத்துவக் கல்லூரிகள் அனைத்தும் தேவைப்படும் வரிசையின் கீழ் அரசு கட்டுப்பாட்டில் வரும். இதுவரை ஏன் எடுக்கப்படவில்லை என்று தெரியவில்லை. இதில் நான் பார்வையாளராக இருக்க முடியாது.
மொத்தமாக 5,000 படுக்கைகள் உட்பட போதிய மருத்துவ வசதி புதுச்சேரியில் இருந்தும் மக்கள் கஷ்டப்படுகிறார்கள். பிரதமர், உள்துறை அமைச்சர் தலையீடு தேவை. தேவையானதை செய்ய புதுச்சேரி அரசை வழிநடத்துங்கள்.
புதுச்சேரியில் பல மருத்துவக்கல்லூரிகள், தேவையான சுகாதார சுற்றுச்சூழல் அமைப்பு இருப்பதால் நாட்டில் மிக சிறந்த சிகிச்சையை பெற்றிருக்க முடியும். ஆனால் மலையிலிருந்து கீழே பாதாளத்தை நோக்கிதான் செல்கிறோம். புதுச்சேரி சிகிச்சை விஷயத்தில் பாதிக்கப்பட்டுள்ளதை மத்திய அரசு அறிய வேண்டும். இதுதொடர்பாக டெல்லிக்கு தெரிவித்துள்ளதும் நிர்வாகியாக எனது கடமைதான்"
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.