காய்கறி உற்பத்திக்காக உருவாக்கப்பட்ட உதகை தாவரவியல் பூங்காவில் மீண்டும் காய்கறி உற்பத்திக்கு வித்திட்டுள்ளது விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது வீட்டுத் தோட்டங்களில் வளர்ப்பதற்காக 15 ஆயிரம் அவரை விதைப் பந்துகள் உருவாக்கப்பட்டுள்ளன.
நீலகிரி மாவட்டம் உதகையின் முக்கிய சுற்றுலா தலமான தாவரவியல் பூங்கா காய்கறி உற்பத்திக்காகவே உருவாக்கப்பட்டது. காலப்போக்கில் பூங்காவாக உருமாறி, தற்போது ஆண்டுக்கு 30 லட்சம் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகிறது.
கரோனா பொது முடக்கத்தால் மூடப்பட்டிருக்கிறது கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டு, பராமரிப்புப் பணிகள் மட்டுமே நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மக்களிடம் வீட்டுத் தோட்ட பராமரிப்பு மற்றும் இயற்கை வேளாண்மையை ஊக்கப்படுத்தும் வகையில், நீலகிரி தோட்டக் கலைத்துறை சார்பில் 15 ஆயிரம் அவரை விதைப் பந்துகள் உருவாக்கப்பட்டு விற்பனை செய்து வருகின்றனர்.
உதகை அரசு தாவரவியல் பூங்கா உதவி இயக்குநர் ராதாகிருஷ்ணன் கூறும் போது, "நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு முழுக்க வளரக்கூடிய காய்கறிகளில் ஒன்றான பெர்னில் எனப்படும் சாதாரண அவரை விதையைக் களிமண் மற்றும் இயற்கை உரம் கலந்து விதைப் பந்துகளாக உருவாக்கி உள்ளோம். இந்த முயற்சியைக் கடந்த ஆண்டு தொடங்கினோம். நல்ல வரவேற்புக் கிடைத்தது.
இந்த ஆண்டும் 15 ஆயிரம் அவரை விதைப் பந்துகளை உற்பத்தி செய்துள்ளோம். ஒரு விதைப்பந்தை ரூ.2-க்கு விற்பனை செய்கிறோம். பொதுமக்கள் வாங்கிப் பயன்படுத்தும் வகையில் மாவட்டத்தில் 4 இடங்களில் விற்பனைக்கு வைத்துள்ளோம். மக்களின் ஆதரவைப் பொறுத்து உற்பத்தியைப் பெருக்கவும் திட்டமிட்டுள்ளோம்.
ஒவ்வொருவரும் வீட்டில் இருக்கும் சிறிய இடத்தில் மண் சட்டிகளில் காய்கறி விதைப்பந்துகளை வைத்துப் பயிர் செய்து காய்கறிகளை விளைவிக்கலாம். ரசாயனம் உரம் போடாமல் மக்கும் குப்பை, மாட்டுசாணம் ஆகியவற்றைப் பயன்படுத்தி ஆரோக்கியமான காய்கறிகளை உண்ணலாம். இயற்கை விவசாயம் செய்ய விரும்புவோர் கேட்டுக் கொண்டால் தக்காளி, வெண்டை, கத்தரி ஆகியவற்றின் விதைப் பந்துகளை தயாரித்துக் கொடுப்போம்" என்றார்.
களிமண், சாணம் மற்றும் இலைமக்கு சேர்த்து ஆர்கானிக் முறையில் விதைப்பந்துகள் தயாரிக்கப்டுகிறது.
வீடுகளில், தொட்டிகளில் வளர்த்து இயற்கை காய்கறிகளை உண்ண விரும்புவோர் 94864 12544 என்ற எண்ணை தொடர்புகொண்டு விதைகளை பெறலாம்.
காய்கறி உற்பத்திக்காக உருவாக்கப்பட்ட உதகை தாவரவியல் பூங்காவில் மீண்டும் காய்கறி உற்பத்திக்கு வித்திட்டுள்ளது விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.