தமிழகத்தில் காவல்துறையினருக்கு போதுமான பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதுடன் உரிய பயிற்சியும் அளிக்கப்படுவதாக டிஜிபி திரிபாதி தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே மணக்கரை பகுதியில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டு கொலை செய்யப்பட்ட காவலர் சுப்பிரமணியன் உருவப்படத்துக்கு திருநெல்வேலி சரக டிஐஜி அலுவலகத்தில் தமிழக டிஜிபி திரிபாதி இன்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
காவலர்கள் உயிரிழந்தால் இழப்பீடு பெற்றுத்தருவதில் பாரபட்சம் காட்டப்படுவதில்லை. வழக்குகள், சம்பவங்களின் அடிப்படையில் இழப்பீடு அளிக்க அரசுக்கு பரிந்துரைக்கிறோம். அதன்படி தற்போது சுப்பிரமணியன் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீட்டை தமிழக முதல்வர் அறிவித்திருக்கிறார்.
காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி காவல்துறை சார்பிலும் உதவிகள் வழங்கப்படும். தமிழகத்தில் போலீஸாருக்கு உரிய பாதுகாப்பு இருக்கிறது.
இதனால்தான் பொதுமக்களுக்கும் போதுமான பாதுகாப்பு வழங்கப்படுகிறது. காவல்துறையினரின் பாதுகாப்புக்கு தேவையான பாதுகாப்பு கருவிகள் கொடுக்கப்பட்டுள்ளதுடன் பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகின்றன.
ஏதோ ஓரிரு சம்பவங்களில் இவ்வாறு துரதிர்ஷ்ட சம்பவம் நடைபெற்று விடுகிறது. குற்றவாளிகள் பயன்படுத்தும் ஆயுதங்கள் நவீன தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டாலும், அவற்றை எதிர்கொள்ளவும், கையாளவும் காவலர்களுக்கு நவீன ஆயுதங்களுடன் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
காவலர்கள் தங்கள் உடல்நிலைகளையும், குடும்பங்களையும் பாராமல் மக்களுக்கு சேவையாற்றுகிறார்கள். அவர்களை குறித்து யார் எது சொன்னாலும் நாங்கள் கவலைப்படுவதில்லை. ஒருசில சம்பவங்களை வைத்து தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரம் அதிகரிப்பு என்று கூறக்கூடாது என்று டிஜிபி தெரிவித்தார்.
அப்போது, தென்மண்டல ஐஜி முருகன், திருநெல்வேலி மாநகர காவல்துறை ஆணைர் தீபக் தாமோர், திருநெல்வேலி சரக டிஐஜி பிரவீன்குமார் அபிநபு உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.