முதல்வர் பழனிசாமி தொடர்ந்த மான நஷ்ட ஈடு வழக்கை நிராகரிக்க கோரி பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில், தன்னை தொடர்புபடுத்தி ஆவணப்படம் வெளியிட்டதற்காக முதல்வர் பழனிசாமி, தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல், சயன், வாலையாறு மனோஜ், ஜிபின், ஷிஜா அணில், ராதாகிருஷ்ணன் ஆகிய 7 பேருக்கு எதிராக, 1 கோடியே 10 லட்சம் மான நஷ்ட ஈடு கோரி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், முதல்வர் பற்றி பேசவும், எழுதவும் தடை விதித்ததோடு, மனுவுக்கு பதிலளிக்க, மேத்யூ சாமுவேல் உள்பட ஏழு பேருக்கும் உத்தரவிட்டது.
இந்நிலையில் முதல்வர் பழனிசாமி தொடர்ந்த மான நஷ்ட ஈடு வழக்கை நிராகரிக்க கோரி பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி P.T.ஆஷா, முதல்வர் பழனிசாமி தாக்கல் செய்த மான நஷ்ட ஈடு வழக்கை நிராகரிக்க எந்த காரணமும் இல்லை எனக் கூறி, மேத்யூ சாமுவேல் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
மேலும், முதல்வர் பழனிசாமி மனுவுக்கு பதிலளிக்க மேத்யூ சாமுவேலுக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை செப்டம்பர் 23-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.