திருப்பூர் அருகே தற்கொலை என போலீஸார் தீர்மானித்த வழக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் நேரடி விசாரணைக்கு பிறகு கொலை என்பது கண்டறியப்பட்டு, 2 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். வழக்கை சரிவர விசாரிக்காததால் காவல் ஆய்வாளர் உட்பட 3 பேர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர்
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, ‘திருப்பூர் மாவட்டம் மங்கலம் அருகே சின்னக்காளிபாளையத்தைச் சேர்ந்தவர் தொழிலாளி மாரிமுத்து (54). இவருக்கு மனைவி, குழந்தைகள் உள்ளனர். கடந்த ஆண்டு பிப்ரவரி22-ம் தேதி வெளியே சென்ற மாரிமுத்து, மீண்டும் வீடு திரும்பவில்லை. இரு தினங்கள் கழித்து, அருகே உள்ள ஜோசியர்காடு பகுதியில் சடலமாக மீட்கப் பட்டார்.
ஆரம்பத்தில் சந்தேக மரணம் என மங்கலம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். பிறகு, தற்கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டது. இருப்பினும் மாரிமுத்து உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர், துணைக்காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களில் குடும்பத்தினர்மனு அளித்தனர். இதைத்தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மித்தல் நேரடி மேற்பார்வையின் கீழ் விசாரணைக்கு உத்தரவிட்டார்.
தனிப்படை போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், மாரிமுத்துவுக்கும், அவரதுஉறவினரான அதே பகுதியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (42)என்பவருக்கும் முன்விரோதம்இருந்துள்ளது. மாரிமுத்து காணாமல்போன தினத்தில், மது அருந்தும்போது இருவருக்கும் இடையில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அப்போது கோபாலகிருஷ்ணனும், அவரிடம் வேலை செய்யும் சென்னிமலைபாளையத்தைச் சேர்ந்த குமார் (41)என்பவரும் சேர்ந்து மாரிமுத்துவை தாக்கியுள்ளனர். எதிர்பாராதவிதமாக அவர் உயிரிழக்கவே, உடலை கிணற்றில் தூக்கி வீசிச்சென்றது தெரிய வந்துள்ளது.
இதுதொடர்பாக கோபால கிருஷ்ணன், குமார் ஆகிய இருவரையும் தனிப்படை போலீஸார் நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
3 பேர் ஆயுதப்படைக்கு மாற்றம்
இந்த வழக்கை மங்கலம் காவல் ஆய்வாளராக இருந்த நிர்மலா தேவி, உதவி ஆய்வாளர்கள் தேவராஜ், மகேந்திரன் ஆகியோர் சரிவர விசாரிக்கவில்லை என தெரிகிறது.
இதையடுத்து, மூவரையும் மாவட்ட ஆயுதப் படைக்கு மாற்றி காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத் தக்கது.