கரோனாவில் இருந்து குணமடைந்த கர்ப்பிணி சவுமியாவிடம் உடல்நலம் குறித்து விசாரிக்கிறார் மியாட் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் டாக்டர் பிரித்வி மோகன்தாஸ், அருகில் சவுமியாவின் கணவர் சதீஷ். 
தமிழகம்

கரோனாவால் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் இருந்த கர்ப்பிணியை காப்பாற்றிய மியாட் மருத்துவமனை

செய்திப்பிரிவு

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணியை மருத்துவர்கள் காப்பாற்றினர்.

சென்னையைச் சேர்ந்தவர் எஸ்.சவுமியா (24). இவரது கணவர் எம்.சதீஷ். 5 மாத கர்ப்பிணியான சவுமியா கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்.

ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்ற அவர்மருத்துவரின் ஆலோசனைப் படி வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். இருப்பினும் உடல்நிலை மோசமடைந்ததால் அவர்தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதையடுத்து, சிகிச்சைக்காக சென்னை கிண்டி அடுத்த மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவக் குழுவினர் பரிசோதனை செய்து பார்த்ததில், அவருக்கு மூச்சுத் திணறல் அதிகமாக இருந்தது. உடலில் 95-க்கு மேல் இருக்க வேண்டிய ஆக்சிஜன் அளவு 60 என்ற அளவில் இருப்பது தெரியவந்தது.

செயற்கை சுவாசம்

நாடி துடிப்பும் குறைந்திருந்தது. தோல் சாம்பல் நிறமாக மாறிஇருந்தது. வயிற்றில் உள்ள கரு ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்து கொண்ட மருத்துவர்கள், உயிருக்கு மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த அவருக்கு செயற்கை சுவாசம் மூலம் சிகிச்சை அளிக்கத் தொடங்கினர்.

மகப்பேறு, நுரையீரல், நரம்பியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் நிபுணர்கள் அடங்கிய மல்டி-டிஸிப்ளினரி குழுவினர் தொடர்ந்து 3 நாட்களுக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளையும் அளித்தனர்.

4-வது நாளில் இருந்து அவரது உடல்நிலையில் படிப்படியாக முன்னேற்றம் ஏற்படத் தொடங்கியது. செயற்கை சுவாசம் இல்லாமல் தானாக சுவாசிக்கத் தொடங்கினார். அடுத்த சில தினங்களில் முழுவதுமாக கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தார்.

வயிற்றில் உள்ள கருவுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாமல் மருத்துவர்கள் காப்பாற்றினர். 16 நாட்கள் சிகிச்சைக்குப் பின்னர் நேற்று மருத்துவமனையில் இருந்து வீட்டுக்குச் சென்றார்.

முன்னதாக சவுமியா, அவரது கணவர் சதீஷ் ஆகியோர் மியாட் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் டாக்டர் பிரித்வி மோகன் தாஸை சந்தித்துநன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

SCROLL FOR NEXT